Breaking
Sun. Nov 24th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

எப்போது ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேன பொது வேட்பாளராக அவதாரம் எடுத்தாரோ அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசியல் அரங்கு பல்வேறு குழப்பங்களுக்கும் பரபரப்புகளுக்கும் மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது.எதிர்கட்சி என்ற ஒன்று,கூட்டு எதிர்க்கட்சி என்ற ஒன்று என எதிர்க்கட்சியிலும் இரு குழுவினர்.இதற்குள் மக்கள் விடுதலை முன்னணியினர் ஒரு பக்கம்.பொதுவாக ஆளும் கட்சிகள் அதிகாரத்திலுள்ள மமதையில் தாங்கள் நினைத்த போக்கில் ஆட்சியைக் கொண்டு செல்ல முனைவார்கள்.

ஆளும் தரப்பிடம் சற்று உறுப்பினர்கள் பலம் நிறைவாக இருந்தால் ஆட்சியாளர்களின் போக்கை சொல்லவே தேவையில்லை.இதனை உரிய நேரத்தில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சுட்டிக் காட்டி தடுத்து நிறுத்த வேண்டிய கடமை எதிர்க்கட்சியையே சாரும்.எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்று செயற்படும் போது பலமிக்க அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது.எவ்வாறு சு.கவும் ஐ.தே.கவும் இணைந்து ஒரு தேசிய ஆளும் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளதோ அவ்வாறு எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தேசிய எதிர்க்கட்சியை உருவாக்கினால் தான் நாட்டின் எதிர்காலத்திற்கு சிறப்பாகும்.

தொகுதி வாரித் தேர்தல் முறையில் உள்ள மிகப் பெரிய குறைப்பாடு பலமிக்க எதிர்க்கட்சியை எதிர் பார்க்க முடியாது.இது போன்ற பல குறைபாடுகளின் காரணமாகவே விகிதாசார பிரதிநிதித்துவ முறைத் தேர்தல் முறைமையின் அவசியம் உணரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள தேசிய அரசின் செயற்பாடுகளைக் கண்டித்து அது தொடர்பில் முறையிடுவதற்காக கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவா சென்றிருந்தனர்.இவ்வாறு சென்றவர்கள் 31-03-2016ம் திகதி நாட்டின் படை வீரர்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் ஜெனீவா முன்றலில் ஆர்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.இத் தேசிய அரசு இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்துள்ளதா என்ற விடயம் வினாவில் முற்றுப் பெற்றாலும் தற்போது இலங்கை நாடு சர்வதேச அரங்கில் தங்களது மதிப்பெண்களை கூட்டி வருவதும் இலங்கை நாடு எதிர் நோக்கிய பொருளாதாரத் தடைகள் போன்ற பாரிய ஆபத்துக்கள் குறைந்து வருவதும் மறுத்துரைக்க முடியாத உண்மைகளாகும்.இச் சந்தர்ப்பத்தில் இத் தேசிய அரசின் கெளரவத்திற்கு சர்வதேச அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் நம்பிக்கை இழக்கும் வகையிலுமான செயற்பாட்டைத் தான் இக் கூட்டு எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்.

இத் தேசிய அரசின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவும் வேறு சிலதை மையப்படுத்தியுமே சர்வதேசம் இலங்கைக்கு நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்கின்றது.இத் தேசிய அரசின் மீது சர்வதேசம் நம்பிக்கையை இழக்கும் போது இலங்கை மீதான சர்வதேசப் பொறிமுறைகள் கடுமையாக வாய்ப்புண்டு.இதனால் பாதிக்கப்படப் போவது  முழு இலங்கை நாட்டு மக்கள் என்பதை இக் குறித்த நபர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ் ஆர்பாட்டத்தில் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளமையை மிகவும் சிறு பிள்ளைத்தனமான செயற்பாடாகவும் நோக்காலாம்.

இலங்கை நாட்டின் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் போது இலங்கை அரசு அதனை எதிர்க்கொள்ள சர்வதேசத்திற்கு சில நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கப்படலாம்.இவைகளை வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்து அரசை வீழ்த்துவதற்கான யுக்தியாகவும் இது அமையலாம்.இலங்கை மக்களை அடமானம் வைத்தாவது ஆட்சியைக் கைப் பற்ற விளைபவர்களின் கையில் ஆட்சி வந்தால் அவர்களின் ஆட்சி எவ்வாறு அமையுமென்பதை இவைகளிலிருந்தும் சிறிது மட்டிட்டுக் கொள்ளலாம்.

இவ் வருடம் ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசைன் இலங்கை வந்திருந்த போது வரிந்து கட்டி வீதியில் இறங்கியவர்களும் மஹிந்த ராஜ பக்ஸவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது சர்வதேசத்தின் தலையீடுகள் வேண்டாமென்று கொக்கரித்தவர்களும் இன்று தங்களுக்கொன்று என்றதும் சர்வதேசத்திடம் நீதி கேட்டுச் செல்வது மாத்திரம் எங்ஙனம் நியாயமாகும்.ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அறிக்கை வரும் தருவாயில் இலங்கை அரசை சர்வதேசத்தின் முன் கை கட்டச் செய்திட மு.காவின் செயலாளர் நாயகம் அந் நேரத்தில் ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளரிடம் அறிக்கை சமர்ப்பித்ததை தேசத் துரோகமென வர்ணித்தவர்கள் இன்று அது போன்றதொரு வேலையையே செய்துள்ளார்கள்.

இதன் காரணமாக அன்று மஹிந்த ராஜ பக்ஸ மு.காவை தனது அரசிலிருந்து வெளியேறுமாறு பாராளுமன்றத்தில் மறைமுகமாக கூறி இருந்தார்.இன்று இவர்களை யார்? எதிலிருந்து வெளியேற்றுவது? இவர்கள் நாட்டின் படை வீரர்களைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருப்பதானது ஜெனீவாவில் இவர்களுக்கெதிரான அதிர்வுகளை ஏற்படுத்தவே அதிகம் வாய்ப்புள்ளது.இவர்கள் சர்வதேசங்களிடமிருந்தே நாட்டுப் படை வீரர்களை பாதுக்காக்கக் கோருகிறார்கள்.சர்வதேச அழுத்தங்களின் காரணமாகவே இலங்கை நாடு தனது படை வீரர்களை சர்வதேசத்தின் முன் கை கட்டச் செய்யுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

இவ் ஆர்பாட்டத்தின் தலைப்பு இலங்கைக்கு எதிரானது என்பதை விட சர்வதேசத்தின் இலங்கை அணுகுமுறைகளுக்கு எதிரானது என்பதே உண்மை.இதனை தமிழ் புலம் பெயர் அமைப்புக்களிடம் சற்று ஏற்றி விட்டால் போதும் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஜெனீவா முன்றலில் இது போன்ற ஆர்பாட்டங்களைச் செய்து இவர்களின் ஆர்பாட்டங்களை செல்லாக் காசாக மாற்றி விடுவார்கள்.

சில விடயங்களை நாட்டினுள்ளும் இன்னும் சில விடயங்களை ஜெனீவா சென்றும் தீர்க்க முயற்சிப்பது பொருத்தமானது.த.தே.கூவின் கோரிக்கைகளை சர்வதேச அழுத்தங்களின்றி இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாது.த.தே.கூவின் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் ஜெனீவா செல்வது பொருத்தமான வழி முறையாகும்.அவர்கள் சாதிப்பார்களா? இல்லையா? என்பது இரண்டாவது விடயம்.கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கைகளானது நாட்டினுள் இருந்து கொண்டு சாணக்கிய அரசியல் வழி முறைகளைக் கையாள்வதன் மூலம் சாதித்துக்கொள்ள முடியுமான பிரச்சினைகளாகும்.

இவைகளை சர்வதேசம் கொண்டு செல்ல முனைவது குறித்த அணியினரின் இயலாமையையே எடுத்துக் காட்டுகிறது.இவர்கள் ஆறு கோரிக்கைகளை தங்களது கோரிக்கைகளாக முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதில் இவர்களது பிரதான கோரிக்கையாக எதிர்க் கட்சித் தலைவர் பதவி தங்களுக்கு உரித்தானது அதனை இத் தேசிய அரசு தங்களுக்கு தர மறுக்கின்றது என்பதாகும்.இவர்கள் கோரும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சிறுபான்மையினருக்கு சார்பானது என்பதால் இதனை சரியாக உள்ளுணர்ந்து ஆராயும் போது சர்வதேசத்திடம் இத் தேசிய அரசின் மதிப்பெண் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

இவ்வாறானவற்றையே சர்வதேசமும் இலங்கையிடமிருந்து எதிர்பார்த்த வண்ணமுள்ளது.கடந்த ஜெனீவாத் தொடரில் உரையாற்றிய ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளர் இவ்வாறான சில விடயங்களைக் குறிப்பிட்டு இலங்கை தேசிய அரசின் சிறு பான்மையினரின் தீர்வுக்கான அணுகு முறையில் தனது பூரண திருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.சர்வதேசம் மஹிந்த அரசின் காலத்தில் இறுதிவரை இலங்கை நாட்டோடு மிகக் கடுமையான போக்கை கடைப்பிடித்திருந்தமை யாவரும் அறிந்ததே.இவர்கள் மஹிந்த ஆதரவு அணியினர் என பகிரங்கமாகவே முத்திரை குத்தப்பட்டவர்கள்.இதன் காரணமாக இவர்களின் ஆட்டங்கள் சர்வதேசத்திடம் அவ்வளவு எடுபடாது என்றே நம்பப்படுகிறது.

இக் கூட்டு எதிர்க்கட்சியினர் தங்களுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவது நியாயமானதா? என்பது ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒரு தலைப்பாகும்.பொதுவாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டிய ஒருவருக்கென சில பண்புகள் உள்ளன.அவர் நாட்டின் அனைத்து விடயங்களிலும் பூரண தெளிவும் ஈடுபாடும் கொண்டவராக இருத்தல் வேண்டும்.சகல இன மக்களின் ஆதரவும் தேவையும் நன்கு அறிந்தவராக இருத்தல் வேண்டும்.இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் செயற்படக் கூடியவராக இருத்தல் வேண்டும்.தற்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் ஐயா ஒரு குறித்த இன (தமிழ்),பிரதேச (வட கிழக்கு) ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் தலைவர்.அவர் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுப்பவராக ஒரு போதும் குறிப்பிட முடியாது.

அவரின் அனைத்துச் செயற்பாடுகளும் வட கிழக்கு தமிழ் மக்களை மாத்திரம் நோக்கியதாகவே அமையும்.ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டால் அவர் அந் நாட்டின் பொதுத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்துக் கதைப்பதே வழமை.ஆனால்,எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் ஐயா எங்கும் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி மாத்திரமே கதைப்பார்.2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்களிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட இரா சம்பந்தன் ஐயா தாங்கள் வரவு செலவு செலவுத் திட்டத்தைப் பார்த்து வாக்களிக்கவில்லை இவ்வரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக ஆதரவளித்தோம் என்றே குறிப்பிட்டிருந்தார்.

இக் கருத்தை ஒரு போதும் ஏற்க முடியாது.இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை நாட்டை தவறான வழிக்கு கொண்டு சேர்க்கும்.ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்க வேண்டிய சீரிய பண்பை இவ்வாறான கருத்துக்கள் கேள்விக்குட்படுத்துகின்றன.அந்த வகையில் பார்க்கும் போது ஒரு எதிர்க்கட்சிக்குரிய சீரிய பண்பை தற்போதுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர்,ஜே.வி.பியினர் சிறப்பாகவே வெளிப்படுத்துகின்றனர்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது மிக முக்கியமான பதவியாக இருப்பினும் ஒரு குறித்த அடிப்படையில் இவ்வாறு தான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என எங்கும் எழுத்துருச் சட்டங்கள் இல்லை.மரபு ரீதியான வழி முறைகள் மூலமே சபாநாயகரினால் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படுவார்.எதிர்க்கட்சியில் உள்ளதில் அதிகமான ஆசனங்களைக் கொண்ட ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என்றே பேச்சு வழக்கில் அதிகம் கூறப்படும்.எதிர்க்கட்சியில் உள்ள அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டுமாக இருந்தால் அதனை த.தே.கூவிற்கே வழங்க வேண்டும்.

எதிர்க்கட்சி என்பது பல சிறு சிறு குழுக்களையும் கட்சிகளையும் தனி நபர்களையும் கொண்டிருக்கும்.எதிர்க்கட்சியில் உள்ள அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சியின் உறுப்பினர்களை விட அதிக உறுப்பினர்களின் ஆதரவு குறித்த எதிர்க்கட்சியில் உள்ள இன்னுமொரு நபருக்கு இருப்பின் அக் குறித்த நபருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கொடுப்பது இன்னும் பொருத்தமானது.இந்த அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியை தீர்மானிப்பதிலும் எதுவித சட்டச் சிக்கலுமில்லை.தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமைர்ந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியிடம் த.தே.கூவிடம் இருக்கும் ஆதரவை விட மும்மடங்கு  ஆதரவுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாயக்கவிற்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முப்பத்தேழு உறுப்பினர்களும் அமைச்சர் சம்பிக்கவிற்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாப்பத்திரண்டு உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளமை அவர்களின் பலத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது.இந்த வகையில் பார்க்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கூட்டு எதிர்க்கட்சியினருக்கு வழங்க வேண்டும்.இவைகள் மூலம் இவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்குரிய பண்பும்,உறுப்பினர் பலமும் உள்ளமை புலனாகிறது.

இலங்கை அரசியலமைப்பின் 46 (1) (அ), 46 (1) (ஆ) சரத்துக்களின் அடிப்படையில் அமைச்சரவையின் அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை முப்பதையும் அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்களினது பிரதி அமைச்சர்களினது கூட்டு மொத்த எண்ணிக்கை நாற்பதையும் விஞ்சுதலாகாது என தெளிவாக குறிப்பிடுகிறது.இருப்பினும்,இலங்கை அரசியலமைப்பின் 46 (4) சரத்து ஒரு தேசிய அரசு அமையுமிடத்து அமைச்சரவை அமைச்சர்களினது எண்ணிக்கையும்,அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்களது எண்ணிகையும்,பிரதி அமைச்சர்களினது எண்ணிக்கையும் பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.இதன் அடிப்படையிலேயே பாராளுமன்ற அனுமதியோடு இத் தேசிய அரசில் 88 அமைச்சரவை அமைச்சர்,இராஜாங்க அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐ.தே.கவும் ஐ.ம.சு.கூவும் இணைந்தே தேசிய அரசை நிறுவியுள்ளது.இதனடிப்படையில் ஐ.ம.சு.கூவில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் தேசிய அரசில் உள்ளவர்களாகவே கருதப்படுவார்கள்.இவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும் போது அது இத் தேசிய அரசின் நிறுவலை இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையில் கேள்விக்குட்படுத்தும்.இதனடிப்படையில் பார்க்கும் போது இவர்களுக்கு இத் தேசிய அரசு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை வழங்க முடியாது.

இதனை அறிந்து தான் இத்தனை உச்சாகத்துடன் மஹிந்த சார்பு பொது கூட்டு எதிர்க்கட்சியினர் இவ் விடயத்தை தூக்கிப் பிடித்துள்ளார்கள் என நினைக்கின்றேன்.இவ் விடயத்தில் இனவாதமும் புதைந்து கிடப்பதால் இதனை வைத்து அரசியல் செய்யும் போது மஹிந்த சார்பு அணியினர் சிறந்த அறுவடைகளை பெற்றுக்கொள்ளவும் முடியும்.இலங்கை அரசியலில் அதிக விளைச்சலைக் கொடுக்கக் கூடிய முதலீடு இனவாதம் தானே? தற்போது ஐ.ம.சு.கூவில் அங்கம் வகித்த நான்கு கட்சிகள் ஐ.ம.சு.கூவிலிருந்து விலகி தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கோரும் விடயமானது இவ் விடயத்தை இன்னும் தெளிவாக்குகிறது..

இவ்வாறான சிக்கல்கள் எழ ஐ.ம.சு.கூவினுள் காணப்படும் உட் கட்சி மோதல்களே பிரதான காரணமாகும்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மைத்திரி சார்பு அணியினர் சிலர் அதிலிருந்து பிரிந்து ஐ.தே.கவில் போட்டியிட்டிருந்தனர்.மைத்திரியின் வலது கரமான அமைச்சர் ராஜித சேனாரத்ன மைத்திரியின் செல்லப் பிள்ளை ஹிருனிகா கூட ஐ.தே.க சார்பாகவே போட்டி இட்டிருந்தார்.கடந்த பாராளுமன்றத் தேர்தல் மிகவும் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த போதும் ஐ.ம.சு.கூவின் ஒரு பிரச்சார மேடையில் கூட ஜனாதிபதி மைத்திரி கலந்து கொள்ளவில்லை.

இவைகள் ஜனாதிபதி மைத்திரி மறைமுகமாக ஐ.தே.கவின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்துள்ளதை எடுத்துக் காட்டுவதோடு இவ் விடயம் கடந்த தேர்தலில் ஐ.ம.சு.கூவின் வெற்றியில் மைத்திரியின் பங்கு சிறிதுமில்லை என்பதை கூறுகிறது.கடந்த தேர்தலில் மைத்திரியின் ஆதரவும் ஐ.ம.சு.கூவிற்கு கிடைத்திருந்தால் ஐ.தே.கவை விட அதிக ஆசனங்களை ஐ.ம.சு.கூ பெற்றிருக்கலாம்.அத் தேர்தலில் ஐ.ம.சு.கூவின் சார்பில் போட்டியிட்ட பலரது மேடைகளிலும் மஹிந்த ராஜ பக்ஸவே பிரதான கதாநாயகனாக திகழ்ந்தார்.கடந்த தேர்தலில் ஐ.ம.சு.கூ பெற்றுக்கொண்ட ஆசனங்களுக்கு மஹிந்தவே சொந்தக்காரர்.

இவ்வாறன நிலையில் ஐ.ம.சு.கூவும் ஐ.தே.கவும் இணைந்து தேசிய அரசை அமைப்பதாக இருந்தால் எவ்வாறு தேர்தல் காலத்தில் ஐ.ம.சு.கூவின் தலைவராக இருந்தும் ஜனாதிபதி மைத்திரி மௌனம் காத்தாரோ அவ்வாறு தனது மௌனத்தைத் தொடர்கையில் மஹிந்த ராஜ பக்ஸ இணங்கியிருந்தால் மாத்திரமே ஐ.ம.சு.கூவானது ஐ.தே.கவுடன் தேசிய அரசை அமைத்திருக்க வேண்டும்.அதுவே நேர்மையான கனவான்களின் அரசியல் வழி முறையாகும்.

தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு ஐ.தே.கவினால் ஆட்சியமைக்க போதுமான ஆசனங்களை கைப் பற்றிக்கொள்ள முடியவில்லை.சிலரை வளைத்துப் போட்டு ஐ.தே.க ஆட்சியமைத்தாலும் அது ஸ்திரமான ஆட்சியாக இராது.ஜனாதிபதியும் ஐ.ம.சு.கூவின்  தலைவர் என்பதால் ஐ.தே.கவிற்கு தனது நேரடியான ஆதரவை வழங்க முடியாது.ஜனாதிபதியின் ஆதரவின்றி ஒரு தரமிக்க ஆட்சியையும் வழங்க முடியாது.ஐ.தே.கவின் ஸ்திரமான ஆட்சிக்கு ஐ.ம.சு.கூவின் உதவி புறக்கணிக்க முடியாத ஒன்று.மஹிந்த மிகவும் கஸ்டப்பட்டு பெற்றுக்கொண்ட ஆசனங்களை தேர்தல் காலத்தில் ஐ.ம.சு.கூவின் வெற்றிக்கு எதுவித சிறு பங்களிப்பும் செய்யாது ஒதுங்கிருந்த மைத்திரி தான் தலைவெரெனக் கூறி தேசிய அரசை அமைக்க வந்தார்.

இது தான் உழைத்த பணத்தில் வாழைப் பழத்தை வாங்கி உரித்து உண்ணத் தயாராகிய போது இடையில் காகம் கொத்திச் சென்ற கதையாகவே உள்ளது.இது மைத்திரி மஹிந்தவிற்குச் செய்த மாபெரும் துரோகங்களில் ஒன்றாகும்.

இவ்வாறு மஹிந்தவின் அதீத முயற்சியில் கிடைத்த ஆசனங்களை வைத்து அமைத்துக்கொண்ட தேசிய அரசாங்கத்தில் ஐ.ம.சு.கூவிற்கு கிடைத்த பதவி ரீதியான விடயங்களில் மஹிந்த அணியினர் பெரும் புறக்கணிப்புகளைச் சந்தித்தனர்.இக் கூட்டு எதிர்க்கட்சியினர் தேசிய அரசு அமைப்பதில் அவ்வளவு நாட்டம் கொள்ளவில்லை.ஐ.தே.கவை வீழ்த்தி தங்கள் கூட்டில் அனைத்தையும் வீசி கடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஐ.ம.சு.கூவின் முக்கிய புள்ளிகள் பலர் எதிர்கொண்ட சவால்களிலிருந்து விடுபட்டு தங்களுக்கான பலமிக்க பாதுகாப்பு அரண்களை அமைத்துக்கொள்ள முயன்றனர்.

இத் தேசிய அரசுடன் இணைந்து செல்வது மஹிந்த சார்பு அணியினர் சிலருக்கு மிக பாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது.மஹிந்தவின் தலைமையில் அணி சேரும் போது சிலருக்கு மிகப் பெரிய பதவிகளை சிரமமின்றி அடைவதற்கான சாதகமான சூழ் நிலையுமுள்ளது.இது போன்ற பலதின் விளைவுகளினாலேயே இக் கூட்டு எதிர்க்கட்சி உதயமானது.ஜனாதிபதி மைத்திரி மஹிந்த அணியினரைப் புறக்கணித்து தேசிய அரசு அமைத்ததிலும் சில நியாயங்களில்லாமல் இல்லை.மஹிந்த அணியினர் இழுத்த இழுப்பிற்கு ஜனாதிபதி மைத்திரி சென்றால் அவர் தனதுயிரை பணயம் வைத்து போராடியது அர்த்தமற்றதாகிவிடும்.

இத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரி ஐ.ம.சு.கூவின் வெற்றிக்கு உழைத்திருந்தால் இவ்வாறான விமர்சங்கள் சிறிதேனும் எழுந்திருக்காது.ஐ.ம.சு.கூ ஆட்சியமைக்கப் போதுமான ஆசனங்களைப் பெற்றிருந்தால் மஹிந்த ராஜ பக்ஸ பிரதமராவதற்காக வாய்ப்புகள் இருந்தமை மைத்திரியின் இப் போக்கிற்கான இன்னுமொரு நியாயமாக கூறலாம்.

கடந்த தேர்தலின் போது மஹிந்த அணியினருக்கு ஐ.ம.சு.கூவில் ஆசனம் வழங்குவதை விட்டும் மைத்திரி புறக்கணித்திருந்தால் அவர்கள் தங்களுக்கு இயலுமான வேறு வழிகளைச் சிந்தித்து செயற்பட்டிருப்பார்கள்.அவ்வாறு இல்லாமல் அவர்களுக்கும் ஐ.ம.சு.கூவின் வேட்பாளர் அந்தஸ்தை வழங்கி அவர்களது வாக்குகளை எடுத்துக்கொண்டு பதவிப் புறக்கணிப்பு,வேறு புறக்கணிப்புக்களைச் செய்வது அநாகரிகமான அரசியல் போக்கு.மஹிந்த செய்தால் துரோகம் மைத்திரி செய்தால் துரோகமல்ல என இலங்கை நாட்டு மக்கள் இரு கண் கொண்டு நோக்குவது மஹிந்த ராஜ பக்ஸவின் கடந்த கால செயற்பாடுகளின் சாபம் எனலாம்.

மஹிந்த அணியினர் கடந்த தேர்தலின் போது ஐ.ம.சு.கூவில் ஆசனம் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வேறு கட்சியில் போட்டி இட்டிருந்தால் நிச்சயமாக அவர்களால் இன்று த.தே.கூவிடம் உள்ள ஆசனத்தை விட அதிகமான ஆசனங்களை கைப்பற்றிக்கொள்ள முடிந்திருக்கும் என்பதை அவர்களின் தற்கால ஆதரவுகள் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன.மைத்திரி மஹிந்த அணியினருக்கு ஐ.ம.சு.கூவில் ஆசனம் வழங்கியதும் அவர்களுக்கான  சிறிதும் நழுவ இயலாத பலமிக்க பொறியாகும்.இவைகளை வைத்துப் பார்க்கும் போது மஹிந்த அணியினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும்.ஆனால்,வழங்க முடியாத சூழ் நிலையே காணப்படுகிறது.

 

 

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *