நீர்கொழும்பில் நேற்றைய தினம் வன்முறை இடம்பெற்ற பகுதிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நேற்றைய தினம் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து நீர்கொழும்பு பகுதிக்கு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று விஜயம் செய்ததோடு, அங்குள்ள பள்ளிவாசலுக்கும் சென்றுள்ளார்.
அத்துடன் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பள்ளிவாசலில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாட்டில் அண்மைய நாட்களாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் சற்றே ஒடுக்கப்பட்டவர்களாக பார்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு சார்பாக யாரும் ஆறுதல் கூறவோ, வழிநடத்தவோ முன்வராத நிலையில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் அவர்களை சென்று சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
மேலும், வன்முறையை ஏற்படுத்த விளையும் தற்கால சூழலில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் ஆயரின் செயல் போற்றப்படுகின்றது.