கிழக்கின் அரசியல் ஜாம்பவான்களுள் ஹிஸ்புல்லாஹ் என்கின்ற ஆளுமை தவிர்க்க முடியாதது. பெரும் தலைவர் அஷ்ரப் பாசறையிலே வளர்க்கப்பட்டு இன்று ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கின்ற ஒரு தலைமைத்துவமே ஹிஸ்புல்லாஹ்.
அஷ்ரபின் பின்னரான இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னரான அபிவிருத்தி அரசியலில் இவருக்கு நிகர் எவரும் இல்லை என்று கூறுமளவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக வகுத்தவர் ஹிஸ்புல்லாஹ்.
கடந்த ஐந்து மாதகாலங்களுக்கு முன்பாக வடக்கிலே வெளிவரும் “தீபம்” பத்திரிகை ஹிஸ்புல்லாவுக்காக ஒரு பக்கத்தினை ஒதுக்கி “இரவலர்களை புரவலர்களாக மாற்றிய ‘அபிவிருத்தியின் விளக்கு’ ஹிஸ்புல்லாஹ்” என மகுடம் சூட்டியிருந்தது.
இதற்கு எதிர்மாறாக கிழக்கு தமிழ் அரசியல் தலமைகளின் கருத்துக்கள் இருப்பதானது, தமிழ் அரசியல்வாதிகள் வடக்கை மூளையாகவும் கிழக்கினை மற்றைய பாகங்களாகவும் ஒப்புவித்த கதையினை ஊர்ஜிதப்படுத்துவதுபோல் தென்படுகின்றது.
இவர்களின் கருத்துக்களை ஒளிபரப்பவும் ஒத்துதூதவும் ச(க)தி எனும் ஊடகம் வெளிக்கிளம்பியுள்ளது. மட்டக்களப்பிலே ஹிஸ்புல்லாஹ் எனும் தனிமனித முயற்சி மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தினை பல்லின சமூகத்துக்குமாக உருவாக்கியுள்ள நிலையில் அதனை கேள்விக்கு உட்படுத்த இவர்கள் எடுக்கும் முயற்சிகள் எண்ணிலடங்காதது.
அரசியலில் நாங்கள் மந்தைகள் அல்ல, என்பதனை உணர்த்தி குறுகிய காலத்தில் கோலோச்சி நிற்கின்றது முஸ்லிம் அரசியல். கிழக்கு தமிழ் அரசியல் தலைமைகள் சகோதர தமிழ் மக்களுக்காக செய்தவை என்ன? அபிவிருத்தி அரசியலில் ஒரு கக்கூசு கூட கட்டமுடியாத நிலையில் நீங்கள் கக்கும் வார்த்தைகள் மீண்டும் உங்கள் அரசியல் இருப்பை தக்க வைப்பதற்கான மாயாஜாலங்களாகவே எண்ணத்தோன்றுகின்றது?
போட்டி என்றால், பொத்துவில் தொட்டு மட்டக்களப்பு – திருகோணமலை- யாழ்ப்பாணம் வரை புதிதாய் ஒரு பல்லலைக்கழகத்தையோ, இன்னொன்றையோ உருவாக்கிக் காட்டுங்கள். மாற்றமாக கறையான் புற்றெடுக்க கருநாகம் குடியிருந்த கதையாய் எப்படி தட்டிப்பறித்து குடியேறலாம் எனும் குறுகிய சிந்தனையை தவிர்ந்து கொள்ளுங்கள்.
“பற முடியாவிட்டால் ஓடு முடியாவிட்டால் நட முடியாவிட்டால் தவழ்” அசைந்து கொண்டே இரு ,என்கின்றார் மார்டீன் லூதர் கிங். ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் அசைந்து கொண்டிருக்கின்றார். கிழக்குத் தமிழ் அரசியல் தலைமைகளே நீங்கள் அசைவது எப்போது?
ஷிபான் BM
மருதமுனை.