மட்டக்களப்பு தற்கொலையாளியை நன்கு அறிந்த தமிழ் பேசும் முக்கிய அமைச்சர் எனும் தலைப்பில் எமது சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட முற்றிலும் உண்மைக்கு புறம்பான, ஆதாரங்களும் அற்ற செய்தி தொடர்பில் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஊடகப்பிரிவு அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் அவ் அறிக்கையில்,
அனைத்து மக்களோடும் சகிப்புத் தன்மையோடும், சரியான புரிதலோடும் பேதங்களற்ற முறையில் செயலாற்றுகின்ற தனித்துவமான பண்பினைக் கொண்ட மக்கள் பிரதிநிதியான அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவை, அவர் முற்று முழுதாக வெறுக்கின்ற, கண்டிக்கின்ற மிலேச்சத்தனமான பண்புகளை கொண்ட தீவிரவாத குழுக்களோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டு மக்களை குழப்புகின்ற செயற்பாட்டை முன்னெடுப்பது மிகவும் கீழ்த்தரமானதும் மோசமானதுமான ஒரு செயற்பாடாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
எவ்வித ஆதாரங்களும் அற்றதான உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியினை ஊடக தர்மத்தினை எல்லாம் புறம் தள்ளி விட்டு வெறும் அரசியல் காழ்ப்புணர்வுகளை மையமாக வைத்து வெளியிடுவது ஊடகத்தின் பொறுப்பற்ற தன்மையையும் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கும், கேலிக்குட்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.
மட்டக்களப்பிலே சம்பவம் இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலை முதல் சமுர்த்தி திணைக்கள புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளை நகரின் பல்வேறு இடங்களிலும் ஆரம்பித்து கொண்டிருந்த தருணம், குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் அறிந்ததும் உடனடியாக களத்திற்கு விரைந்ததுடன் வைத்தியசாலை, சம்பவம் இடம்பெற்ற தேவாலயம், மாவட்ட செயலகம், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் என்பவற்றுக்கு சென்று தேவையான துரித ஏற்பாடுகளை செய்வதற்கான பங்களிப்புக்களை வழங்கியிருந்தோம்.
அத்தோடு பாதுகாப்பு மற்றும் அரச உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் துரிதகரமான தனது பங்களிப்பை மேற்கொண்டார்கள்.
அத்துடன் அடுத்த நாளும் வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், இறுதிக்கிரியை நிகழ்வுகளிலும் பங்கேற்றார்கள்.
அத்துடன் பிரதேசத்தின் அமைதி சிதைந்து விடக்கூடாது என்பதற்காக மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் மற்றும் ஏனைய மதத்தலைவர்களோடும், பிரதேச அரசியல் பிரதிநிதிகளோடும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், இன்று வரையும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் சார் விடயங்களை முன் கொண்டு வரும் ஒருவர் அத்துடன் குறித்த குண்டு வெடிப்பினால் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை மிக துரிதமாக புனரமைப்பதற்கான நகர்வுகளை பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் வலியுறுத்தி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா.
நாட்டின் இறையாண்மைக்கும், இன ஒற்றுமைக்கும், அமைதிக்கும் குந்தகம் ஏற்படக்கூடிய வகையிலான செயற்பாடுகளை ஒருபோதுமே கொண்டிராத ஒருவராக அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா உள்ளார்.
ஒரு காலத்தில் சகோதரப் படுகொலைகளை தடுத்து மாவட்டத்தில் இரத்த ஆறு ஓடுவதை தடுக்க வேண்டும் என செயற்பட்டு தனது பதவியையும் உயிரையும் துச்சமாக மதித்து இந்த நாட்டிற்காகவும், அமைதிக்காகவும் இவர் செய்த தியாயங்களுக்கு முழு உலகுமே என்றும் சான்று பகரும்.
அமைதியையும், சமாதானத்தையும் சமத்துவத்தையும் அதிகம் நேசிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒரு போதும் அரசியலுக்காக இன மத பேதம் பார்த்து செயலாற்றிய, அதற்காக இனவாத கருத்துக்களை மக்கள் மத்தியிலே விதைத்த வரலாற்றை கொண்டவர் கிடையாது.
அனைத்து இன மக்களையும் சமமாகவும் , சகோதர வாஞ்சையுடன் அரவணைத்து பிரதேசத்தின் அமைதிக்கும் சக வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்து வரும் ஒருவர்.
இந்நிலையில் இன மத பிரதேசவாதம் கடந்து மாவட்டத்தில் செயலாற்றுகின்ற ஒரு மக்கள் பிரதிநிதிக்கு இவ்வாறான பொய்யான செய்திகள் மூலமாக அபகீர்த்தியை ஏற்படுத்தி விடலாம், அவரை மக்களை விட்டும் தூரப்படுத்தி விடலாம் என கங்கணம் கட்டிக் கொண்டு குறித்த ஊடகங்கள் செயற்படுவது முட்டாள்தனமானதும் பிழையானதுமாகும்.
குறித்த சம்பவம் தொடர்பில் துரிதகரமான புலனாய்வு விசாரணைகள் பாதுகாப்பு தரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை குழப்பும் விதமாக இவ்வாறான இணையத்தளங்களின் மூலமாக வெளியிடப்படுகின்ற விசமித்தனமான செய்திகளுக்காக இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு சார்பில் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.