(M.M.M. Noorul Haq)
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் எப்பகுதிகளில் வாழ்கின்றனரோ அப்பகுதிகளில் வாழ்கின்ற ஏனைய சமூக மக்களோடு எப்பொழுதும் ஒரு சுமூகமான உறவையும் பரஸ்பர நேசத்தையும் வெளிப்படுத்தி வாழ்ந்துவந்த வரலாறு தொன்மையானதாகும்.இதனால்தான் இந்த நாட்டின் விசுவாசத்தில் என்றுமே பிசகாத ஒரு பிடிமானத்தையும் கொண்டு வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலைக்கு நேரெதிராக முஸ்லிம்கள் சமாதானத்தின் எதிரிகளாக அடுத்த சமூகத்திலுள்ள சிலரினால் விமர்சிக்கப்பட்டிருந்தாலும் அச்சமூகத்தின் பெரும்பாலான மக்களினால் முஸ்லிம்கள் வரவேற்புக்குள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.இதுதான் முஸ்லிம்கள் இந்த நாட்டின் அமைதிக்கு எதிரானவர்களாக என்றுமே இருக்கவில்லை என்பதற்கு பலமாக இருக்கின்ற ஓர் சான்றாகும்.
பொதுபலசேனா போன்ற சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகள் முஸ்லிம்களை இந்த நாட்டின் விரோதிகளாகவும் சிங்கள மக்களின் விரோதிகளாகவும் காண்பிக்கின்ற ஒரு தோற்றப்பாட்டை கடந்த மூன்று வருடங்களாக ஹலால் பிரச்சனை தொட்டு தீவிரவாதிகள்-அடிப்படைவாதிகள் என்ற கூற்று வரை அவர்களது முஸ்லிம்கள் குறித்தான சித்தரிப்பு விரிவடைந்து காணப்படுகின்றது.
இந்தப் பிழையான சித்தரிப்புக்குள் இந்த நாட்டில் வாழ்கின்ற பெரும்பாலான சிங்கள மக்கள் இரையாகிப்போகவில்லை.குறித்த சிலர்தான் இதன் பின்னணியில் இருந்துவந்திருப்பதும் நமது அவதானங்களுக்குரியவையாகும்.பொதுபலசேனா மாத்திரமன்றி காலத்துக்குக் காலம் பௌத்த பேரினவாத சிந்தனைகளில் ஊறித்திளைத்த சிலரினால் இம்முன்னெடுப்புக்கள் சந்தர்ப்பங்களுக்கு சந்தர்ப்பம் மேற்கிளப்பப்பட்டு வந்திருக்கின்றன.
என்றாலும் முஸ்லிம்கள் பௌத்தர்களுக்கு எதிரான ஒரு சக்தியாக அவர்கள் கருதுமளவில் இயங்குதளத்தைக் கொண்டவர்களாக இருக்கவில்லை.ஆட்சியாளர்களோடு ஒரு சிநேகபூர்வமான உறவை எப்பொழுதும் பேணுவதில் முஸ்லிம் சமூகம் பின்னிற்காத கோணம்தான் அவர்களோடு பௌத்த ஆட்சியாளர்களும் ஏனைய சிங்கள குடியியல் சமூகத்தினர்களும் கைகோர்த்து வாழ்வதில் ஓர் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இப் பாங்கு பிரத்தியட்சமானது.
அண்மையில் பொது பல சேனா கொழும்பில் நடத்திய ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், “இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை அழித்து முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனும் உலமாக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்த தயாராக உள்ளதாகவும்” கலாநிதி டிலந்த விதானகே குறிப்பிட்டிருந்த செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் அறியமுடிந்தது.
இந்தக் கூற்றின் மூலம் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் பாரிய முரண்பாடொன்று வெடித்து தொடர்ச்சியான பிணக்குகள் இருந்துவருவதாகவும் அதற்கு தீர்வுகாண்பதற்காக பொது பல சேனா தலைமைதாங்குவதாகவும் அர்த்தப்படுத்துகின்றது.அப்படியானால் இங்கு எழும் கேள்வி யாதெனில் அவர்கள் குறிப்பிடும் சிங்கள விரோத செயற்பாட்டினை முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருந்து முன்னெடுத்த குழுவினர் யாரென்பதாகும்.
உண்மையில் இவ்வாறான ஒரு நிகழ்வு இங்கு நடைபெறவே இல்லை.அதேநேரம் அவ்வாறு நடந்திருந்தாலும் கூட அதனைத் தீர்த்துவைக்கும் அதிகாரமும் அதற்குரித்தான கட்டமைப்பு பொது பல சேனாவுக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டிருக்கின்றது என்கின்ற ஒரு முக்கியமான வினாவும் இவ்விடத்தில் எழுப்பப்படவேண்டியிருக்கின்றது.
சிங்கள மக்களுக்கெதிராக முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதத்தை அல்லது முஸ்லிம் தீவிரவாதத்தை பிரயோகிக்கின்றனர் என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டால், அதுகுறித்து பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு பொது பல சேனாவுக்கு எந்தவிதமான தார்மீக பொறுப்புக்களும் இருக்க முடியாது.மாறாக அவர்கள் தம் மக்கள் சார்பில் முஸ்லிம்களுக்கெதிரான முறைப்பாட்டை அரசாங்கத்திடம்,அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை அமுல்படுத்துகின்ற காவல்துறையினர் போன்றோரிடம்தான் புகார் செய்திருக்க வேண்டும்.இந்த யதார்த்த நிலைக்கு முரணாக முஸ்லிம்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது ஒரு முரண்பாட்டு சிந்தனையின் வெளிப்பாடாகும்.
பொது பல சேனாவின் அழைப்பைப்பார்த்த மாத்திரத்தில் அதன் உள்ளார்ந்த சதியைப் பற்றியோ அர்த்தமற்ற முனைப்பென்பது குறித்தோ முஸ்லிம் சமூகமாகிய நாம் அக்கறை எடுத்துக்கொள்ளாது நாம் சமாதானத்தின் தூதுவர்கள் என்பதை நிரூபிப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சி செயலாளர்களும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை,ஐ.தே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர்ரஹ்மான், அக்கட்சியின் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் போன்றோர்கள் பச்சைக்கொடி காட்டியிருப்பது ஒரு விசித்திரமான செயலென்றுதான் குறிப்பிட வேண்டும்.
ஏனெனில் முஸ்லிம் சமூகத்துக்கு பொது பல சேனா போன்றோர்கள் தவறிழைத்திருந்தாலும்கூட நாம் அவர்களோடு பேசி ஒரு தீர்வைப் பெறமுடியாது. ஒன்றில் அரசாங்கத்திடம் முறையிட வேண்டும் அல்லது அவர்களின் செயற்பாட்டின் இன்னொரு வடிவமான காவல்துறையினரிடனும் நீதிமன்றத்துடனுமே நாம் நமது பக்க நியாயங்களை முன்வைத்து நியாயங்கள் பெறவேண்டியிருப்பதே பொருத்தமானதாகும். இந்த யதார்த்தத்தை மீறி மேற்குறிப்பிட்டோர் தமது இசைவுகளை இயம்பியிருப்பது வியப்பல்லாமல் வேறென்னவாகும்?
நமது நாட்டின் மிகப்பெரிய சட்ட ஏற்பாடாக இருப்பது அரசியலமைப்புச் சட்டமாகும்.அவ்வரசியலமைப்புச் சட்டத்தின் அத்தியாயம் மூன்று அடிப்படை உரிமைகள் பற்றி விபரிக்கின்றது.அதில் 10ஆவது உறுப்புரிமை பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.
“ஆளொவ்வொருவரும்,தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற்கொள்ளுதற்கான சுதந்திரமுட்பட,சிந்தனை செய்யும் சுதந்திரம்,மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம்,மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும்.”
மேற்படி சட்டத்திற்கு ஏற்புடையவர்களாக முஸ்லிம்கள் தமது அறநெறியான இஸ்லாத்தை இந்நாட்டில் பின்பற்றிவருகின்றனர்.அதனால்தான் இந்த நாட்டின் சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் இருந்தும் கூட முஸ்லிம்கள் தமது மார்க்க செயற்பாட்டை முன்னெடுப்பதில் ஆட்சேபனைகளை முன்னிறுத்தாது இருப்பதாகும்.ஆயின் முஸ்லிம்களின் சமய செயற்பாட்டினால் இந்நாட்டின் அமைதிக்கு சீர்குலைவு ஏற்படவில்லை என்பதுதான் இதன் உறுதியான அர்த்தமாகும்.
ஆனால் முஸ்லிம் சமூகத்தின் மதக் கடமைகளை முன்னெடுப்பதில் சில அச்சுறுத்தல்களையும் பிழையான பொருள்கோடல்களையும் முன்வைத்து பொது பல சேனா போன்ற அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அத்துமீறல்களை நமது நாட்டு சட்டத்தின் அடிப்படையில் கேள்விக்குட்படுத்தும் உரிமையும் அதன் அவசியமும் முஸ்லிம் சமூகத்துக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்டிருந்தும் அதனை சரியாக கையாள்வதற்கு முடியாமலிருக்கின்றது.
இந்த தடைக்கு நமது அணுகுமுறையில் ஏற்படுகின்ற சறுக்குதல்கள் ஒரு காரணமாக இருந்தாலும் ஆளும் அரசாங்கமாக இருக்கின்ற சிங்கள மக்கள் சார்ந்த கட்சி தலைமைத்துவம்,அதன் இருப்பு,தேர்தல் வெற்றி போன்ற காரணங்களினாலும் சரியான நீதி நிலைநாட்டப்படாமல் மறுக்கப்பட்டுவருகின்ற ஒரு துயரமான நிலை முஸ்லிம்களுக்கு இருக்கின்றது.இந்நிலையின் எதிர்மறையானது சிங்கள மக்களுக்கு இவ்வாறான சட்ட ஏற்பாடுகளை கையாள்வதில் எந்தச் சறுக்குதல்களும் இருப்பதற்கு வழியில்லை என்பதைத்தான் திடமாக தெரிவிப்பதாகக் கொள்ளமுடியும்.
மேற்சுட்டிக்காட்டிய அடிப்படை உரிமைகள் என்பது மிகவும் வலிமையுடையதாக இருக்கவேண்டுமென்பதனை நமது நாட்டின் சட்ட ஏற்பாடுகள் மிகவும் உறுதியாக வலியுறுத்துகின்றது.உண்மையில் இனப்பாகுபாட்டுச் சிந்தனையினால் பாதிக்கப்படுகின்ற ஒரு சமூகமாக முஸ்லிம்கள் இருந்தும் இந்த சட்ட ஏற்பாட்டின் துணையூடாக தட்டிக்கேட்கும் சந்தர்ப்பங்களை அடைந்துகொள்ளாமல் இருக்கின்றோம்.இது முன் சுட்டிக்காட்டிய அரசாங்கத்தின் சார்பு நிலையினால் நாம் முயன்றும் தோற்றுப்போய்விடுவோம் என்கின்ற அச்சத்தின் வெளிப்பாடாகக்கூட இருக்க முடியும்.
2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டத்தின் 3ஆம் உறுப்புரிமையின் முதலாம் உட்பந்தி “ஆளெவரும் போரைப் பரப்புதலோ அல்லது பாரபட்சத்தை,எதிர்ப்பு உணர்ச்சியை அல்லது வன்முறையைத் தூண்டுவதாக அமையும் தேசிய,இன அல்லது மத ரீதியிலான பகைமையை ஆதரித்தலோ ஆகாது”.
மேற்படி சட்டம் என்பது மதத்தை முன்வைத்தும் இனத்துவ குழுமத்துவத்தை முன்னிறுத்தியும் பாகுபாடுகளை ஏற்படுத்துவதென்பது ஒரு பயங்கரவாத செயற்பாட்டுக்கு சமனானதென்பதை குறிப்பிடுகின்றது.அது மாத்திரமன்றி இச்சட்டத்தின் பின்னுள்ள உறுப்புரைகளின் படி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள்,முனைப்புக் காட்டுபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என்பதையும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகளுக்கு மேற்படாத கடூழிய மறியல் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதையும் முன்மொழிகின்றது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்ட சந்தேக நபர்கள் மீது விதிவிலக்கான சூழ்நிலைகளில் மேல் நீதிமன்றத்தினால் தவிர பிணையில் விடுவிக்கப்படுதல் ஆகாது என்ற கடுமையான சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது.அப்படியாயின் முஸ்லிம் சமூகம் தமது மதத்தினாலோ அல்லது தமது குழுமத்தினாலோ பாகுபாட்டை உருவாக்க முனைந்திருந்தால் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் முயற்சிகள் எப்போதோ அரங்கேற்றப்பட்டிருக்கும்.அவ்வாறான நிலை தோன்றாமலிருப்பதும் முஸ்லிம்கள் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடவில்லை என்பதை மிக ஆணித்தரமாக வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும்.
இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவையின் பதினைந்தாவது அத்தியாயம் சமய சம்பந்தமான தவறுகள் குறித்து பேசுகின்றது.அதுமாத்திரமன்றி அடக்கஸ்தலங்களை அத்துமீறி உடைப்பது,மதஸ்தலங்கள் மீது கல்வீச்சு மேற்கொள்வது போன்ற நிகழ்வுக்கெல்லாம் இலங்கையின் சட்டத்தின் படி தண்டனைக்குரியதாகும். சமாதான சீர்குலைவுக்குரியதாகவும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குற்றமுமாகவுவே இவை பார்க்கப்படுகின்றது.
ஆகவே புதிதாக சட்டங்களை ஆக்குவது குறித்து ஆலோசிக்கவேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை.இருக்கின்ற சட்டங்களை சரியாகப் பிரயோகிக்கின்ற சூழ்நிலையொன்று உருவாக்கப்பட்டுவிட்டால் பொது பல சேனா போன்ற இனவாத,மதவாத சிந்தனைகளினால் ஏற்படுத்தப்படுகின்ற அசௌகரியங்களும் இனக்கலவரங்களும் இந்த நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டிருக்க முடியும்.
ஒன்றுகூடுகின்ற சந்தர்ப்பம் தடுக்கப்படாத ஒன்றாயினும் அது அடுத்த சமூகத்தினர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையிலான முனைப்புக்களைக் கொண்டதாக அமைகின்ற போது அது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்பதையும் நமது நாட்டின் சட்டதிட்டங்கள் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.இவ்வேற்பாட்டின் கீழ் முஸ்லிம்களை நிறுத்தமுடியாமலிருப்பது கூட முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் விரோதிகள் அல்ல என்பதை வலிமைப்படுத்துகின்றது.
நாம் இங்கு சுட்டிக்காட்டிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு நமக்கெதிராக முனைப்புக்கொள்ளப்படுகின்ற பாகுபாடுகளை எதிர்கொள்பவர்களாக மாறவேண்டும்.
அதற்கு முதல்படியாக நாம் செய்யவேண்டியது நாட்டின் அரசாங்கத்திடம் நமது நிலையை விளக்கி நமக்கெதிராக முன்னெடுக்கப்படுகின்ற இடர்களை நிறுத்துவதற்கு சட்டத்தைச் சரியான முறையில் உபயோகிக்கும் ஒரு நிலைப்பேற்றை நிரந்தரப்படுத்துமாறு கோரவேண்டும்.
உண்மையில் நாம் பொது பல சேனா போன்ற அமைப்புக்களோடு பேசுவதற்கு செல்வதென்பதும், விளக்குவதும் நம் மீது கடமையென நினைத்துக்கொண்டு, விளக்கில் வண்டு விழுவது போல் நாம் சென்று அகப்பட்டுக்கொள்வதும் நமக்கு ஆரோக்கியமான விளைவுகளைத் தரப்போவதில்லை.அரசாங்கம் நம் மீது இவ்வாறான நெருக்குவாரங்களை நேரடியாக பிரயோகிக்காமல் இருப்பதுதான் நமது இன்றைய பலமாகும்.அதனை பலப்படுத்துவதற்கு என்னென்ன முயற்சிகளை நமது தரப்பில் நின்று யார் யாரெல்லாம் முன்னெடுக்கவேண்டுமோ அவர்கள் இப்பக்கம் தமது சிந்தனைகளை செலுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகள் நம்மை நோக்கி பேசுவதற்காக அழைத்த பல சந்தர்ப்பங்களில் நாம் பின்வாங்காது பகிரங்க விவாதங்கள் வரை சென்று பேசியிருக்கின்றோம்.
கண்ட பலன் தான் என்ன? இதனை அவர்கள் செவிசாய்த்து ஏற்றுக்கொண்டவர்களாக இருந்திருந்தால் மீண்டும் இன்று நம்மை அழைக்கின்றவர்களாக இருக்கமாட்டார்கள்.அப்படியல்லாது இப்போதும் நம்மை அழைக்கின்றார்கள் என்றால் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற பெறுபேற்றைத்தான் நாம் அடைந்திருக்கின்றோம் என்பதையே இது அடையாளப்படுத்துகின்றது.அவ்வாறாயின் இந்த செயற்பாடு நமக்கு விமோஷனத்தை தரவில்லை,தரப்போவதுமில்லை என்பதைத்தான் இடித்துரைக்கின்றது.
தோல்விகண்ட வழிமுறைமைக்குள் மீண்டும் மீண்டுமாக நாம் இழுபட்டுச் செல்வதென்பது நமக்குப் பயனைத்தராத அதேநேரம் அடுத்த சமூகத்தினர்கள் மத்தியில் எரிச்சலூட்டும் நிகழ்வாக மாறிவிடும் அபாயமும் இதிலிருக்கின்றது.இப்படியான பாதையில் நமது பயணத்தை மேற்கொள்வது விவேகமானதல்ல.
ஆயின் இதற்கான மாற்று வழி என்ன என்பதை நாம் தேடியாக வேண்டும்.
இந்த யதார்த்தத்தின் பொறிநிலைக்குள் இருந்துகொண்டு பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளாக செயற்படுகின்ற வலிமையற்ற அமைப்புக்களின் கூப்பாடுகளுக்குப் பின்னால் செல்வதைத் தவிர்த்து நமது நேர்மையில் நம்பிக்கை வைத்தும் நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள் நாம் அல்ல என்ற உண்மையிலும் இருந்துகொண்டு நமக்கெதிராக கிளர்ந்தெழுகின்ற இனவாத பாகுபாட்டுச் சிந்தனைகளை சட்டத்தின் துணைகொண்டு எதிர்கொண்டு வெற்றியடைகின்ற ஒரு வழிமுறைமைதான் நமக்கு திட்டவட்டமான வெற்றிகளைக் கிட்டச்செய்யும்.
(நன்றி விடிவெள்ளி)