வவுனியா, ஓமந்தை, பறநாட்டங்கல் பகுதியில் உள்ள தற்காலிக வீடும் அதனுள் இருந்த 40 நெல் மூடைகளும் எரிந்துள்ள போதும் அப்பகுதி கிராம சேவகர் சென்று பார்வையிடவில்லை. இதனால் வீட்டு உரிமையாளர் இழப்பீடுகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா, ஓமந்தை, பறநாட்டாங்கல் பகுதியில் உள்ள ஒரு தற்காலிக வீடு கடந்த வியாழக்கிழமை தீ விபத்தினால் முழுமையாக எரிந்து நாசமாகியது.
இதன்போது குறித்த வீட்டிற்குள் அடுக்கப்பட்டிருந்த 40 நெல் மூடைகள் மற்றும் வீட்டு உடமைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியது.
அயலவர்கள் தீயை அணைக்க முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை.
இந்நிலையில் இது தொடர்பில் ஓமந்தை பொலிசில் வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
ஆனால், தற்காலிக வீடும் நெல் மூடைகளும் எரிந்து மூன்று தினங்கள் கடந்துள்ள போதும் அப்பகுதி கிராம அலுவலர் வருகை தந்து எரிந்த வீட்டையோ அல்லது நெல் மூடைகளையோ பார்வையிடவில்லை.
எமது வயலில் விளைந்த நெல் முழுமையாக எரிந்துள்ளது. இதனால் நாம் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
கிராம அலுவலர் வருகை தந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையால் நாம் இழப்பீடுகளை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.