திருகோணமலை – மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாட்டாளிபுரம் கிராம மக்கள் எவருக்கும் கடந்த 10 வருடங்களாக சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் கவலை தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு யுத்தத்தினால் இக்கிராம மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு நலன்புரி முகாமில் இருந்து மீண்டும் 2008ஆம்ஆண்டு தமது கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
எனினும் தற்போது வரையில் தமது கிராமத்தில் எவருக்கும் இதுவரையில் சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப்படவில்லை என கவலை தெரிவிப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
கூழித்தொழிலையும், விறகு சேகரித்தலையும் பிரதானமாக கொண்ட இவர்கள் தமக்கான உணவு முத்திரையை வழங்க வேண்டுமென தெரிவித்து பல்வேறுபட்ட ஆர்ப்பாட்டங்கள், மகஜர் கையளிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் இதுவரை அவை சம்பந்தப்பட்டவர்களால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
எனவே இது குறித்து திருகோணமலை மாவட்ட அரசியல் தலைமைகளும், அரசஅதிகாரிகளும் கவனம் செலுத்தி பாட்டாளிபுரம் கிராம மக்களுக்கு சமுர்த்தி உணவு முத்திரையை பெற்று கொள்ள ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.