Breaking
Sun. Nov 24th, 2024

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் வெளியான அறிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு மாதிரிகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை நேற்று வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்று மன்னார் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு சார்ச்சைகள் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மன்னார் மனிதப் மனித எலும்புக்கூடுகளின் பரிசோதனை கார்பன் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தினூடாக வெளிவந்துள்ளது.

இந்த அறிக்கையில் எங்களுக்கு பல்வேறு விதமான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குறித்த காலப்பகுதியினுடைய நிர்ணயம் சரியான முறையில் தெளிவு படுத்தல் போதாமல் இருக்கின்றது.

அவ்வாறான காலப்பகுதியில் அந்த சம்பவம் நடை பெற்று இருக்குமாக இருந்தால் ஒரு எலும்புக்கூட்டிலே இரும்புக்கம்பியால் பிணைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடு
ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் படி 600 ஆண்டுகளுக்குள் குறித்த எலும்புக்கூட்டுடன் காணப்பட்ட இரும்புக்கம்பி உக்கி அழிந்து போகாமல் இருக்கின்றதா? என்கின்ற
வழமையான சந்தேகம் எழுகின்றது.

அதற்கு அப்பால் ஒரு ‘பிஸ்கட் பக்கட் உரை’ கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆவணங்களும் இந்த 600 ஆண்டுகளுக்கு முற்படுத்தப்பட்டுள்ளதா? என்கின்ற சந்தேகம் எழுகின்றது.

இவ்விடையத்தை நீதிமன்றம் சாமானியர்களான எங்களுக்கும், காணாமல் போன உறவுகளை தேடுகின்ற சங்கங்களுக்கும், அந்த உறவினர்களுக்கும்,மனித உரிமைகள் அமைப்புகளுக்கும், இவ்வாறான விடையங்களை முன் நகர்த்துகின்ற தரப்பினருக்கும் தயவு கூர்ந்து தெளிவு படுத்தி மக்களுக்கு எழுகின்ற சந்தேகங்களை அவர்கள் இல்லாமல் செய்ய வேண்டும்.

அவசர அவசரமாக இந்த மனிதப்புதைகுழியின் எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது ஏன்? என்கின்ற வாதமும் இங்கு எழுகின்றது.

ஏன் எனில் திருக்கேதீஸ்வரம் மாந்தைச் சந்தியிலே அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளுக்கு இன்னும் முடிவில்லை.

மாத்தறை படுகொலையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளுக்கும் இவ்வாறான ஆய்வு அறிக்கைக்கு அனுப்பி இது வரைக்கும் அந்த வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப் படவில்லை.

ஆனால் அவசரமாக இந்த மனித எலும்புக்கூடுகளை அனுப்பி இவ்வாறான ஒரு ஐக்கிய நாடுகள் பேரவையினுடைய 40 ஆவது கூட்டத் தொடர் நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு அறிக்கை வந்திருப்பது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்ற உறவுகளின் எதிர் பார்ப்பு, அவர்களின் நோக்கிற்கு அரசு மாறான ஒரு செய்தியை சொல்ல வருகின்றதா? என்கின்ற ஆதங்கமும், சந்தேகமும் அவர்களுக்கு வழிமையாக எழுகின்றது.

ஆகவே எமக்கு இந்த வலிமையான சந்தேகத்தை நீதிமன்றம் தெளிவு படுத்த வேண்டும் அல்லது துரை சார்ந்த நிபுணர்கள் இந்த விடையத்திலே எங்களுடைய சந்தேகங்களுக்கு தீர்வு காண வேண்டும் என வேண்டு கோள் விடுக்கின்றோம்.

குற்றம் சாட்டப்பட்ட தரப்பினரும், குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட தரப்பினரும், இந்த விடையத்தை கையில் எடுத்து ஆய்வு அறிக்கையில் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்ற ஒரு சூழல் காணப்படுவதினாலும், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் இதற்கு நிதி வழங்கி இவ்வாறான விடையத்தை முன்னெடுத்தாலும், எங்களுக்கு மேலும் வலிமையான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த தரப்புகளுக்கு அப்பால் ஒரு பொதுவான நிலையில் உள்ளவர்கள் அல்லது பண்ணாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த விடையத்தை முன்னகர்த்தி இருந்தால் ஓரளவுக்கேனும் எமது ஐயங்கள் நீங்கி இருக்கும் என்கின்ற வாதமும் முன் வைக்கக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவே இந்த விடையம் தெளிவு படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.
கார்பன் பரிசோதனைக்கான 6 அறிக்கைகளும் 6 விதமான காலப்பகுதியை குறித்து காட்டுவதினால் குறித்த அறிக்கைகளில் உள்ள காலப்பகுதியில் எவ்வாறான நிலையில் அங்கு புதைக்கப்பட்டது என்கின்ற வலிமையான சந்தேகம் இருப்பதினால் தயவு கூர்ந்து இந்த விடையத்தை தெளிவு படுத்தி மக்களினுடைய சந்தேகத்தை தீர்த்துவைக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என்றும் வி.எஸ்.சிவகரன் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், சட்டத்தரணி செல்வராசா டினேசன், மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை தேடும் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திர, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அந்தோனி சகாயம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *