வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவற்துறை உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்து கொள்ளவுள்ளதாக வட மாகாண சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் காவற்துறை உத்தியோகத்தர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.
இதற்காக 18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர்கள், யுவதிகள் முன்வரவேண்டும்.
இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும்.
அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரம் காவற்துறையினரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினரும் மாத்திரமே உள்ளனர்.
இந்தநிலையில் வட மாகாணத்திற்கு தேவையாகவுள்ள காவற்துறை உத்தியோகத்தர்களின் விபரம் குறித்து காவற்துறைமா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் வட மாகாண சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார்.