நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
“நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுண கட்சி தலைவர்களுடன் அண்மையில் பேசியிருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் கருத்தை சிலர் ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, சிலர் நிபந்தனையற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இணங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை தொடரவேண்டுமா இல்லையா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை இரத்து செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஆட்சேபனையும் இல்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள ஜனாதிபதி,
“நான் யாருடனும் கோபமில்லை.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ரத்து செய்தற்கு பேரவை முடிவு செய்தாலும், நான் அதை எதிர்த்து நிற்கவில்லை.
ஜனாதிபதி பதவிக்கு வரும் போது இது குறித்து வாக்குறுதியளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது எனது கடமையாகும். எனவே நாடாளுமன்றம் அது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதனிடையே, 2015ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
பொது வேட்பாளரை ஆதரித்த போது மாதுலுவாவே சோபித்த தேரரின் முக்கிய கோரிக்கையில் இதுவும் ஒன்றாக இருந்துள்ளது.
அத்துடன், ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என கோரி வருகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன் போது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நீக்குவது குறித்து இருவரும் பேசக்கூடும்” என அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.