யாழ்ப்பாணத்தில் 72 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது.
நேற்று (4) இரவு 8 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களான தினேஸ், நிரோஸன், றெஜி ஆகியோர் குறித்த கஞ்சா கடத்தலை முறியடித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பின்தொடர்ந்து விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், தென்மராட்சி எல்லைப் பகுதியில் வைத்து கஞ்சாக் கடத்தல்காரர்களைமடக்கிப் பிடித்தனர்.
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களும் சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் மகனும், இன்னொரு உறுப்பினரின் மருமகனுமே கைதாகியுள்ளனர்.
கட்டைக்காடு 12ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினரின் மகனான தங்கராசா நிசாந் (25) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ஈ.பி.டி.பியின் விகிதாசார உறுப்பினரின் மருமகனான ஞானசேகரன் ரகு (37) ஆகியோரே கைதாகியுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேசசபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் குடும்பங்களில் இருந்து கஞ்சாவுடன் இருவர் கைதாகிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.