சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எஸ்.எம்.சார்ள்ஸ், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க திணைக்களத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த அவர்,
“என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.
உரிய அறிவுறுத்தல்கள் எதுவுமின்றி, பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன்.
தன்னுடைய இந்தத் திடீர் இடமாற்றம், பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. சுங்கத் திணைக்களம், கடல் போன்றது.
சட்டவிரோதமான கடத்தல்கள், வியாபாரங்கள் என அனைத்தும், சுங்கத் திணைக்களத்தினூடாகவே இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில், எனக்குக் கீழுள்ள அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே, திடீரென நான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்.
இந்நிலையில், தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பிலும், தனது திடீர் இடமாற்றம் தொடர்பாகவும் சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.