நானாட்டன் – வங்காலை, கற்றாலம் பிட்டி காட்டு பகுதியில் தொடர்ச்சியாக கற்றாழை செடிகள் சட்ட விரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றன.
எனினும் குறித்த நடவடிக்கைக்கு எதிராக வங்காலை பொலிஸார் மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என வங்காலை கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வங்காலை – கற்றாலம் பிட்டி பகுதியில் வன ஜுவராசிகளுக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்ட வங்காலை சரணாலயத்தில் அரிய வகையான கற்றாழை செடிகள் காணப்படுகின்றன.
அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர்களினால் கற்றாழை செடிகள் சட்டவிரோதமாக அகழ்வு செய்யப்பட்டு வருகின்ற போதும், கிராம மக்களினால் குறித்த நபர்கள் பிடிக்கப்பட்டு வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கற்றாலம் பிட்டி பகுதியில் வேறு இடங்களை சேர்ந்த மூவர் கற்றாழை செடிகளை அகழ்வு செய்துள்ளனர்.
சம்பவத்தை அவதானித்த வங்காலை கிராமத்தை சேர்ந்த பிரதேசவாசி ஒருவர் வங்காலை ஆலய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், அப்பகுதிக்கு உடன் சென்றுள்ளனர்.
எனினும் அகழ்வு செய்யப்பட்ட பல முடைகளை கொண்ட கற்றாழை செடிகளை கைவிட்டு அகழ்வு செய்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வங்காலை மக்கள் தமது விசனத்தை தெரிவித்துள்ளனர்.
வியாபார நோக்குடன் குறித்த கற்றாழைச் செடிகள் அகழ்வு செய்யப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
எனினும் தமது கிராமத்தில் மருத்துவ தேவைகளுக்கு கூட ஒரு கற்றாழையையும் தாம் அகழ்வு செய்வதில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயத்தில் வங்காலை பொலிஸார், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதினாலேயே சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
எனவே பொலிஸாரும், உரிய அதிகாரிகளும் இதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என வங்காலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.