பிறந்துள்ள புது வருடத்தில் சிறப்பான அபிவிருத்திகலோடு, சிறந்த சேவைகளை முன்னெடுக்க உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் எதிர் பார்க்கின்றேன் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர சபையின் ‘சபா’ மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நகர சபையின் 11 ஆவது அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எமது மன்னார் நகரத்தை அபிவிருத்திகளுடன் கூடிய வளமான அழகான நகரமாக மாற்றுவதே எமது நோக்கம்.
அந்த நோக்கத்திற்கு சபை உறுப்பினர்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மன்னார் நகரசபை பிரிவுக்குற்பட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக வீதி, கழிவு அகற்றல் மற்றும் வடிகான் புனரமைப்பு, குளம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் மக்களினால் முன் வைக்கப்பட்ட மன்னார் மது விற்பனை நிலையம் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த மது விற்பனை நிலையத்தில் தரமற்ற மதுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை, மது விற்பனை நிலையத்திற்கு முன் மது அருந்துவதாகவும் இதனால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுவதாகவும், முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் நிபந்தனைகளுக்கு அமைய குறித்த மது விற்பனை நிலைய செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் அல்லது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் நகர சபையில் பதிவு செய்யப்பட்ட முன் பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபாய் வழங்குவது என குறித்த அமர்வின் போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.