Breaking
Mon. Nov 25th, 2024

மாத்தையாவையும் இரு நூறு போராளிகளையும் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் தான் சுட்டுக் கொன்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விடுதலைப் புலிகள் ஜனநாயக உரிமைகளை மீறினர் என்றும் தமிழர் தரப்பையே அவர்கள் கொலை செய்தனர் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் புலிகளோடு டீலிங் நடைபெற்றதாகவும் பேசியிருந்தார்.

சயந்தனின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பெரும் கண்டனத்திற்கும் உள்ளானது. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேரந்தவர்களும் இந்தக் கருத்தினை எதிர்த்தார்கள்.

இந்நிலையில், கடந்த 9ம் திகதி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இது தொடர்பான விவாதம் சூடாக இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 9ஆம் திகதி நடந்த இக் கூட்டத்தில் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகிய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோடீஸ்வர், ஸ்ரீநேசன், யோகேஸ்வரன், உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஒரு விவகாரத்தை எழுப்பினார். அண்மையில், தென்மராட்சி கிளை பொறுப்பாளர் கே.சயந்தன் கொழும்பில் உரையாற்றியதை சுட்டிக்காட்டி, இவர்கள் எல்லாம் எப்படி இதை கூற முடியும்? கட்சியின் நிலைப்பாடு என்ன என கேள்வியெழுப்பினார்.

சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய இக் கேள்வியினையடுத்து கூட்டத்தில் சர்ச்சையேற்பட்டது. சயந்தன் கூறியதில் என்ன தவறு என எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பினார்.

ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபட்டவர்களை தமிழீழ புலிகள் கொன்றார்கள்தானே என்று சுமந்திரன் பதில் சொல்லியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தமிழீழ விடுதலைப் புலிகள தமது இயக்கத்தினரையே கொன்றார்கள் என்று பேசிய சுமந்திரன், மாத்தையாவையும் 200 போராளிகளையும் அவர்கள் கொன்றவர்கள்தானே என்றார்.

இதற்கு சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “நீங்கள் சொல்லும் கொலைகளையெல்லாம் செய்ததாக தலைவர் உங்களிடம் வந்து சொன்னாரா” என்று சூடான விவாதத்தை இவர்கள் எழுப்பினர்.
இதேவேளை, இதுபோன்ற கருத்துக்களை திரும்பத் திரும்ப கூறுவீர்களாயின் கட்சியை விட்டு விலகப் போவதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் அங்கு தெரிவித்ததாக தெரிகிறது.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் விவகாரத்தை இப்பொழுது தேவையற்ற விதமாக எதற்காக இழுக்கிறீர்கள்? இப்போது நம் முன்னே இருக்கும் பணிகள் இவைதானா? வீட்டு திட்ட பிரச்சினைகள் இருக்கிறது, ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ளது, அதைப்பற்றி பேசாமல் இப்போது பேசப்பட வேண்டிய விடயம் இதுதானா என சாள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன் ஆகியோர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தைக் கக்கும் விதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருப்பவர்களே இதுபோன்று கருத்துக்களை வெளியிட்டு, புலி நீக்க அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், இது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை மடைமாற்றும் செயலாக அமைந்து வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசாமல் அரசாங்கத்தைக் காப்பாற்றும் நடவடிக்கையிலும், அதுநேரம் புலிகளையும் போர்க் குற்றவாளிகளாகக் காட்ட வேண்டிய தேவையும் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தற்போது ஏற்பட்டிருப்பதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதை விடுத்து, மென்வலு அரசியல் என்று கூறி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அணியொன்று உருவாகிக் கொண்டிருப்பது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *