Breaking
Mon. Nov 25th, 2024

-சுஐப் எம் காசிம்-

புயலடித்து ஓய்ந்த சூழலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது போன்ற பிரமையும் பீதியும் நாட்டின் அரசியல் களத்தை விட்டபாடில்லை. இரண்டு மாதங்கள் அதிகார மோதல்களின் உச்சக்கட்டத்திலிருந்த நமது நாடு, இன்று மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தின் அகங்காரத்தால் எரிமலைக் குமுறல்களாக அனல் கக்கின்றன.

113 எம்பிக்களைப் பெறுவதில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பழி தீர்க்கும் படலங்களின் அரசியல் காட்சிகளையே இந்தக் குமுறல்கள் இன்று காண்பிக்கின்றன. இந்தக்காட்சிகள் “மாமனை வீழ்த்திய மருமகன்” என்ற எனது கட்டுரையின் சிலவரிகளையும் ஞாபகப்படுத்துகிறது.

சிறகுகளை முற்றாக வெட்டினாலேயே பறக்கும் ஆற்றலை ஒரு பறவை இழக்கும். மாறாக ஒரு சில இறகுகளைக் கத்தரித்து பறவையின் பிறப்பாற்றலை முடக்க முடியாது என்பதே அது. இரண்டு மாதப்புயல் இப்போது சுனாமியாக இல்லை. அம்புபட்டு சிறகொடிந்த ஆலா போன்று அத்தனை கோழிக் குஞ்சுகளையும் காவிச் செல்ல கங்கணம் கட்டிப்பறக்கின்றது எக்ஸிகியூடிவ் (Executive). கண்ணில் படும் குஞ்சுகளைக் கவ்விக் கொண்டு கண்ணைக் கொத்தி காட்டுக்குள் வீசி எறிவது போலுள்ளது எக்ஸிகியூடிவின் மனப்பாங்கு.

பிரதமர் ரணிலைக் கொண்டு வருதற்கு சில கட்சிகள் காட்டிய அதீத அக்கறை எக்ஸிகியூடிவை எரிச்சலூட்டியுள்ளதாலேயே இந்தக்கள நிலவரங்கள்.

ரணிலுக்கான ஆதரவை வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருக்கு விதித்த நிபந்தனைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்திருந்தார்.

“தச்சன் வேலைக்கும், மேசன் வேலைக்கும் வித்தியாசம் தெரியாதவர், வீடு கட்டப் புறப்பட்டால் நிலைமை என்னவாகும்?” தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலிடம் விதித்த அத்தனை நிபந்தனைகளும் பிரதமரின் அதிகாரத்தில் இல்லை. ஜனாதிபதி செய்ய வேண்டியதை பிரதமரைச் செய்யுமாறு பணிப்பது ”புயல் காற்றில் மாவு விற்கும் செயற்பாடு” போன்றது.

காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை, உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கம், ஆளுநர் நியமனம், அமைச்சர்கள் நியமனம், கூட்டுத் தாபனத் தலைவர்கள் நியமனம், பாதுகாப்பு உயரதிகாரிகள் நியமனம் ஏன் பிரதமர் நியமனம் கூட, அத்தனையும் ஜனாதிபதியின் அதிகாரத்தில் அப்படியே உள்ளதே.

நந்திக்கடல் வெற்றியில் நாயகனாக இருந்த ஷவேந்திர டி சில்வாவை இராணுவ சேவைக்கு இணைத்தமை எக்ஸிகியுடிவின் கடும்போக்கு மனோபாவத்தைக் காட்டுகின்றதே.

19 இனூடாக கடிவாளம் மூக்கில் இடப்பட்டதா? அல்லது கழுத்தில் இடப்பட்டதா? எக்ஸிகியூடிவ் எதற்கும் பயந்ததாகக் காணவில்லையே.? தனது அதிகாரத்தைக் கொச்சைப் படுத்திய அத்தனை பேரும் இன்று அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாது அலைக் கழிக்கப் படுகின்றனர்.

இத்தனைக்கும் மேலாக அதிரடியாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள். கடிவாளம் மூக்கை இறுக்கியிருந்தால் எக்ஸிகியூடிவின் மூச்சுத் திணறியிருக்கும். கழுத்திலிடப்பட்டதால்தான் இத்தனை களேபரம்.

நாட்டின் சுதந்திர வரலாற்றில் இது வரைக்கும் இரண்டு முஸ்லிம் ஆளுநர்களே இருந்தனர். இதை நியமித்த பெருமைகள் இரண்டு தேசிய கட்சிகளையும் சாரும். ஆனால் ஒரே தினத்திற்குள் இரண்டு முஸ்லிம்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டமை சங்கக்காரவின் அதிரடி ஆட்டத்தில் ஓட்டக்குவிப்பு உயர்ந்தது போலிருந்தது. அதிலும் விசேடமாக கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார், அதுவும் கிழக்கைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் வரலாறு. அந்தப் பிராந்தியத்தில் காலூன்றியுள்ள சகல சிறுபான்மைக் கட்சிகளின் அரசியல் கொள்கைகளிலிருந்தும் வித்தியாசமானவர் இவர். அது மாத்திரம் இல்லை, அண்மைக் காலமாக கடும்போக்கு அரசியல்வாதியாக இவர் மீது பல தரப்பினர் முத்திரை குத்த முயன்ற நிலையில் இந்த ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளமை எக்ஸிகியூடிவை ஏறெடுத்தும் பார்க்காத கட்சிகளை திகைப்பூட்டியிருக்கும்.

ஒட்டு மொத்தமாக பிரதமரை ஆதரித்து எக்ஸிகியூடிவை ஏளனம் செய்த கட்சிகளின் கோட்டைகளுள்ள பிரதேசத்திற்கே இந்த ஆளுநர் நியமனம் அதிரடியாக வழங்கப்பட்டுள்ளது. இதை ஆராய்ந்து பார்த்தால் எக்ஸிகியூடிவின் மனப்பாங்கு பளிச்சிடும். முஸ்லிம் சமூகத்தின் மீதான பற்றுதல் மைத்திருக்கு இல்லாமலில்லை. இருப்பதை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சியா இந்நியமனம்? அல்லது தன்னை ஏறெடுத்தும் பார்க்காத கட்சிகளுக்கு கொம்பு சீவி ஜல்லிக்கட்டுக்கு அழைப்பதா அவரின் மனநிலை? எக்ஸிகியூடிவ் மன நிலைகள் எதுவென்பது இன்னும் ஒன்றரை வருடங்களுக்குள் புரிந்துவிடும்.

முஸ்லிம் சமூகத்தை கௌரவிப்பதற்காக இந்நியமனம் வழங்கப்பட்டிருந்தால் அவரின் செயற்பாடுகள் இதைப் புலப்படுத்தும். தனிநபருக்கு வழங்கி சமூக சாயம் பூச எக்ஸிகியூடிவ் நினைத்திருப்பின் ஆளுநரின் எதிர்கால செயற்பாடுகள் இவற்றைக் கட்டியம் கூறும். மைத்திரியின் சகல செயற்பாடுகளையும் பக்கம் சார் அரசியலாகப் பார்க்க முடியாதுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரைக்கும் எந்தச் சிறுபான்மையினரும் ஆளுநராக நியமிக்கப்படவில்லை.

முதலமைச்சர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் பௌத்தத்தின் இருப்புக்கு ஆபத்து வராமல் அணைகட்டும் நோக்கில் பெரும்பான்மை இனத்தவரே இம்மாகாணங்களில் ஆளுநராக்கப்பட்டனர். இந்தச் சிந்தனையும் காலப்போக்கில் விகாரமாகி முன்னாள் இராணுவத் தளபதிகளை நியமிக்கும் நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன.

உண்மையில் இந்நிலைமை களைத் தகர்த்து அவரவர் இனத்தைச் சேர்ந்தோர் ஆளுநராக்கப்பட்டமை எக்ஸிகியூடிவின் வித்தியாசமான சிந்தனைகளே.

வடக்கில் ஒரு தமிழர், கிழக்கில் ஒரு முஸ்லிம். இரண்டு சிறுபான்மைச் சமூகங்களையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுகி மக்களின் பிரச்சினைகள், தேவைகளை நாடி பிடித்தறிந்து சேவையாற்ற, புதிய வழிகளைத் திறந்து விட்டார். ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி தேர்தலில் காய்களை நகர்த்தும் நோக்கம் இந்த ஆளுநர் நியமனங்களுக்குப் பின்னாலுள்ளன.

மஹிந்தவின் முகாமுக்குள் தமிழ் மொழிச் சமூகத்தினருக்குப் புகலிடமா? சொகுசு வாழ்க்கையா? பெரிய பிம்பத்தை ஏற்படுத்தி வாக்கு வேட்டைக்குத் தயாராகும் வாடைகளே இவ்வாளுநர் விடயங்களில் பட்டுத்தெறிக்கின்றன. உண்மையில் எக்ஸிகியூடிவின் இந்த காய் நகர்த்தல்களால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளூரக் கிலி பிடித்திருக்கும். என்ன செய்வது? புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது. யானை பசித்தாலும் மாமிசத்தை நாடாது. இப்போது எக்ஸிகியூடிவின் மன நிலைதான் ஐக்கிய தேசிய கட்சிக்குப் பிராணவாயு. இப்படிப் போனால் எப்படிப் பிழைப்பது? எல்லோரும் கூடி பாராளுமன்றத் தேர்தலுக்கு கை உயர்த்த வேண்டியதுதான்? அல்லது ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக வேண்டியதுதான். இந்தத் தேர்தலில் எக்ஸிகியூடிவ் இன்னுமொரு தடவை அமைச்சுக்களைப் பறிக்கும்.

தேர்தலை எதிர்கொள்ள பாதுகாப்பு, ஊடகம், நிதி அமைச்சுக்கள் போதுமே. சிறகொடிந்த இந்ந எக்ஸிகியூடிவ் ஆலாவுக்கு இந்த மூன்று குஞ்சுகளும் எப்போது கண்களுக்குப்படுமோ அன்றிலிருது தேர்தல் வாடைதான்?

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *