Breaking
Sun. Nov 24th, 2024

(வை எல் எஸ் ஹமீட்)

மஹிந்த ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுனவில் இணைந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துவிட்டார்கள்.

ஜனாதிபதியும் சில அமைச்சுக்களை வைத்திருப்பதால் அவரது கட்சியான UPFA யும் அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றது. இது கூட்டு அரசாங்கம். எனவே, மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரமுடியாது. சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்; என்ற சுமந்திரனின் விதண்டாவாதங்களை நம்பி நீண்ட அனுபவமுள்ள சம்பந்தன் ஐயாவும் தானே எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்தைவிட்டு வெளியேறமாட்டேன்; என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கின்றார்.

இவ்விவகாரம் இன்றோ, நாளையோ பாராளுமன்றில் சூடுபிடிக்கலாம். இவை இரண்டும் சட்டத்திற்கு முரணான வாதங்களாகும். இவை தொடர்பாக ஏற்கனவே விரிவான ஆக்கங்கங்களை எழுதியிருக்கின்றேன்.

சுருக்கமாக, சரத்து 99(13) ஒருவர் ஒரு கட்சியின் அங்கத்துவத்தை இழந்தால் பாராளுமன்றப் பதவியை இழப்பார்; என்று கூறுகின்றது. அது ராஜினாமா, விலக்குதல் அல்லது வேறுவழியாக இருக்கலாம்.

இவர்கள் ராஜினாமா செய்யவுமில்லை. விலக்கப்படவுமில்லை. இவ்வழிகளில் அல்லது வேறு வழியில் அங்கத்துவத்தை இழந்தாரா? இல்லையா? என்பது அவர்களுடைய காட்சிக்குரிய விடயம்.

இங்கு அவர்களுடைய தேர்தலில் போட்டியிட்ட கட்சி UPFA. அவர்களுடைய சொந்தக்கட்சி SLFP. உதாரணமாக SLFP அவர்களை விலக்கினால்கூட அதனடிப்படையில் UPFA அவர்களை விலக்கினால்தான் அவர்களுடைய பதவிகளுக்கு பிரச்சினை வரும்.

சிலவேளை, SLFP விலக்கி அதனடிப்படையில் UPFA விலக்காவிட்டால் அவர்களது பதவிக்கு பிரச்சினை இல்லை. SLFP தேவையானால் UPFA இற்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம், அது வேறுவிடயம்.

அதேபோன்றுதான் அவர்கள் நாளை SLFP நில் இருந்து ராஜினாமா செய்தால் அதனை அவர்கள் UPFA இற்கு அறிவித்து அப்போழுதும் அவர்கள் தங்களது UPFA அங்கத்துவத்தை அதனடிப்படையில் இழந்துவிட்டார்கள்; என்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்காவிட்டால் அப்பொழுதும் அவர்களது பதவி பறிபோகாது.

அதாவது, UPFA விலக்கவேண்டும் அல்லது அங்கத்துவத்தை இழந்ததாக அறிவிக்க வேண்டும்.
எனவே, SLFP விலக்கினாலும் அல்லது SLFP இல் இருந்து ராஜினாமா செய்தாலும் UPFA நடவடிக்கை எடுக்காதவரை அவர்களது பதவிகளுக்கு பிரச்சினை இல்லை; எனும்போது இவர்கள் கூறும் காரணம் எவ்வளவு சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

அதாவது, SLFP யாப்பில் “ இன்னுமொரு கட்சியில் அங்கத்துவம் பெற்றால் அவர் SLFP அங்கத்துவத்தை இழப்பார்” என்று ஒரு சரத்து இருக்கின்றதாம். இவர்கள் பொதுஜன பெரமுனவில் இணைந்ததால் SLFP அங்கத்துவத்தை இழந்துவிட்டார்களாம். எனவே பாராளுமன்றப் பதவியும் வறிதாகிவிட்டதாம். எவ்வளவு பகுத்தறிவிற்கப்ப்பாற்பட்ட சோலிபுரட்டும் வாதம்.

SLFP யாப்பு என்பது சட்டமா? அது அவர்களுடைய கட்சிக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தம். அதை அவர்கள் மீறினால் அவர்களுடைய கட்சி பார்க்கின்ற விடயம். வெளியில் உள்ளவர்கள் எவ்வாறு தலையிடமுடியும்?

உதாரணமாக, மஹிந்த ராஜபக்ச நாளை SLFP இல் ராஜினாமா செய்து அதனை அவரே பகிரங்கமாக அறிவித்தாலும் சிலவேளை அவரது ராஜினாமாவை அவரது கட்சி ஏற்றுக்கொள்ளாமல், UPFA இற்கு அறிவிக்காமல் இருந்தால் UPFA ஊடக செய்தியை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது.

அவர் தனது பாராளுமன்றப் பதவியை நேரடியாக ராஜினாமா செய்யவிரும்பினால் அரசியலமைப்பு சரத்து 66 இற்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அறிவிக்க வேண்டும்.

எனவே, SLFP யாப்பில் வேறுகட்சியில் அங்கத்துவம் பெற்றால் தனது அங்கத்துவத்தை இழப்பார்; என்று இருந்தால் அதுதொடர்பாக SLFP தீர்மானித்து UPFA இற்கு அறிவித்து UPFA நடவடிக்கை எடுக்காதவரை அவர்களது பாராளுமன்றப் பதவிக்கு எதுவித பிரச்சினையுமில்லை.

சுமந்திரனிடம் கேட்கப்படவேண்டிய மிகவும் இலகுவான கேள்வி: SLFP யின் யாப்பு சட்டமா? இல்லையெனில் அதனடியடிப்படையில் நடவடிக்கை எடுக்க அல்லது கோர அதன் அங்கத்தவரல்லாத ஒருவரால் முடியுமா? அவ்வாறுதான் அங்கத்தவராக இருந்தால்கூட அதை அவர் SLFP யின் உயர்பீடத்தில் பேசவேண்டும் அல்லது நீதிமன்றம் செல்லவேண்டும் SLFP அங்கத்தவர் என்ற முறையில்.

இவை எதுவுமில்லாத நிலையில் ஒருவர் விதண்டாவாதம் புரிகின்றார் என்பதற்காக சட்டம் வளைந்துவிடுமா?

அதேநேரம் ஜனாதிபதி UPFA தலைவர் என்ற முறையிலா அமைச்சுப்பதவிகளை வகிக்கின்றார்? ஜனாதிபதியையும் UPFA தலைவரையும் முடிச்சுப்போடுவதற்குரிய சட்ட அடிப்படையைக் என்ன? எனவே, இது முழுக்க முழுக்க விதண்டாவாதம். சம்பந்தன் ஐயா பழுத்த அரசியல்வாதி என்ற வகையில் அவருக்கு இருக்கும் கௌரவத்தையும் இழக்கச் செய்யும் விடயம்.

த தே கூ இற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாலும் தனக்கு வாசியென்பதாலூம் ஐ தே க இதற்கு ஆதரவு வழங்கலாம்.

முஸ்லிம் கட்சிகள் எதற்காக தலையை நுழைக்க வேண்டும். நியாயம் என்பதாலா? அல்லது த தே கூ நன்றிக்கடன் பட்டதாலா? கிழக்கில் ஒரு முஸ்லிம் ஆளுநர் நியமனத்தைக்கூட ஜீரணிக்க முடியாதவர்கள்.

கடந்தமுறை இவ்விடயம் பாராளுமன்றம் வந்தபோது சில முஸ்லிம் பிரதிநிதிகள் நடந்துகொண்ட விதம் சற்று அதிகமாகவே இருந்தது எல்லோருக்கும் தெரியும்.

இப்பொழுதாவது சற்று நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களுடைய நடவடிக்கைகளில் இனவாத முதலீடு செய்வதற்கு இனவாதிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நியாயத்திற்காகப் பேசினாலும் பரவாயில்லை. அநியாயத்திற்காக, சட்டத்திற்கெதிராக இவ்வாறான விடயங்களில் அவர்களின் விதண்டாவாதத்திற்கு துணைபோய் சமுகத்தை தயவுசெய்து இக்கட்டுக்குள் தள்ளாதீர்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *