தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசுடன் பங்கு பற்றி தமிழ் மக்கள் விடயத்தில் உறுதியான தீர்வினை பெற்றுக் கொடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோரை முஸ்லிம்களாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதில், முஸ்லிம்களுக்கு 13 அமைச்சுக்களையும், ஆளுநரையும் பெற்றுக்கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாழ்த்து என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது காட்டும் உச்சக்கட்ட கோவத்தின் வெளிப்பாடாகவே கருதப்படுகின்றது.
நல்லாட்சி எதை கூறி ஆட்சிக்கு வந்தது என்பதை நினைவுப்படுத்த வேண்டிய சூழலில் தமிழர்கள் உள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்த நல்லாட்சி அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, இந்த நாட்டில் நீடித்து இருக்கின்ற நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்று கொடுப்பது.
ஆனால் நாளுக்கு நாள் இனப்பிரச்சினை அதிகரித்து கொண்டு செல்வதனை காணக் கூடியதாகவே உள்ளது.
ஐந்து மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்தமை தொடர்பில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளது.
நல்லாட்சி முடிய இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில் இந்த மாற்றம் தேவையா என்ற கேள்வியும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனங்கள் காரணமாக சுதந்திரமான தேர்தல்களை நடத்த முடியுமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
கிழக்கு அரசியலில் தீவிரமாக செயற்பட்டு வந்த ஹிஸ்புல்லாஹ் அந்த மாகாணத்தின்ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாணத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த அசாத் சாலி மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சரத் ஏக்கநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேசல ஜெயரட்ன, வடமத்திய மாகாணத்தில் செல்வாக்கை கொண்டவராவார்.
இந்த நிலையில் அரசியலில் அதுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பானவர்கள் மாத்திரம் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளும் இப்படியான ஒரு சூழலில் கேள்விக்குறியாகவே உள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளிதரன் மகிந்தவின் நெருங்கிய சகா என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்போமானால் ஆளுநராக இதுவரைக்கும் தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த எவருமே நியமிக்கவில்லை.
புதிய கிழக்கு ஆளுநருக்கு எதிராக தமிழர் தரப்பிலிருந்து எதிப்பலைகள் சில தினங்களில் கிழக்கில் ஆர்ப்பரிக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.