கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை பொதி செய்து, களஞ்சியப்படுத்தும் இடத்தை சுற்றிவளைத்து கைது செய்த நபர்களை விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அரசியல்வாதி ஒருவர், பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடபகுதி கடல் வழியாக நாட்டுக்குள் கேரளா கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கடத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட பொலிஸ் பிரிவுக்கு பெருந்தொகையான கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பளை பிரதேசத்திற்கு விரைந்த விசேட பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கஞ்சா பொதி செய்யப்பட்டு, களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடத்தை சுற்றிவளைத்து சில சந்தேக நபர்களை கைது செய்ததுடன் பெருந்தொகை கஞ்சாவையும் கைப்பற்றினர். சந்தேக நபர்களை கைது செய்த போது அவர்கள் பொலிஸாரை தாக்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக கிளிநொச்சிக்கு அழைத்து வருமாறும் அவர்களை எந்த பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்க வேண்டாம் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், விசேட பொலிஸ் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக பெருந்தொகை கஞ்சாவை வைத்திருந்தமை, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அப்போது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அரசியல்வாதி, கைதுசெய்யப்பட்டவர்கள் தமது நெருங்கிய ஆதரவாளர்கள் எனவும் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களின் சகோதரர் அரசியல்வாதியின் சாரதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல்வாதியின் செயற்பாட்டால், ஆத்திரமடைந்த பிரதேசத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர், இவர்களால் எப்படி ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
இந்த விடயம் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வடக்கில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விடயத்தில் அரசியல்வாதிகளின் தடைகளும், அச்சுறுத்தலும் இருப்பதால், இந்த பிரச்சினை தொடர்பான விடயத்தை பாதுகாப்பு அமைச்சு கையாளும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த விடயத்தில் தவறாக நடந்துக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, விசாரணைகளின் பின்னர் தண்டனை வழங்கப்படும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.