பட்டதாரிகளை அரச சேவையில் சேர்த்துக்கொள்ளும் குறைந்தபட்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டது.
அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆக காணப்படுகின்றது.
வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயினும், தங்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தம்மிக முனசிங்க தெரிவித்தார்.
பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுதல், பட்டதாரிகளை அரச தொழிலில் இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லையை 45 ஆக உயர்த்துதல் மற்றும் அரசியல் நலனுக்கான ஆட்சேர்ப்புகளை நிறுத்துதல், மாகாண சபைகளில் நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வேலையற்ற பட்டதாரிகள் முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரால் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என கடந்த காலத்தில் தெரிவிக்கப்பட்டபோதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் கூறினார்.