(முகுசீன் றயீசுத்தீன்)
மன்னார் மாவட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையும் முருங்கன் ஆதார வைத்தியசாலையும் சிலாவத்துறை, தலைமன்னார், பேசாலை, எருக்கலம்பிட்டி, அடம்பன், விடத்தல்தீவு, வங்காலை, நானாட்டான், பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய 9 பிரதேச வைத்தியசாலைகளும் உள்ளன.
இந்த வைத்தியசாலைகள் மீதான கட்டுப்பாடு மன்னார் சுகாதார சேவைப் பணிப்பாளர் (RDHS) ஊடாக வட மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் (PDHS) வசம் உள்ளது.
மன்னார் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிக்கும் போது ஒரு முறையான ஒழுங்கு பின்பற்றப்படாமல் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.
தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலையிலுள்ள 8 வைத்திய தொழில்நுட்ப உத்தியோகத்தர்களில் (MLT) ஒருவரை சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு நியமிப்பதில் இனவாத சிந்தனைப் போக்கு தலைதூக்கியுள்ளது.
மன்னார் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு அடுத்ததாக மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பப் பிரிவைக் கொண்டுள்ளதும் MLT நியமிக்கக்கூடிய (cadre) பதவிநிலை உள்ளதுமான ஒரேயொரு வைத்தியசாலை சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையாகும்.
மாத்திரமன்றி அண்மையில் சிலாவத்துறை வைத்தியசாலையை விரும்பிக்கேட்டு புத்தளத்திலிருந்து இடமாற்றம் பெற்று வந்த முசலியைச் சேர்ந்த ஒரு MLT யும் மன்னாரிலேயே தொடர்ந்தும் கடமையாற்றப் பணிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அண்மையில் ஒரு MLT ஐ வாரத்தில் ஒரு நாள் சிலாவத்துறை வைத்தியசாலைக்கு விடுவிக்கும்படி மன்னார் RDHS மன்னார் மாவட்ட வைத்தியசாலை அத்தியட்சகரை (MS) எழுத்து மூலம் கேட்டிருந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பேசாலையைச் சேர்ந்த மன்னார் மாவட்ட வைத்தியசாலை அத்தியட்சகர் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூடம் நிறுவி Cadre பெற்றுக்கொள்ள முயற்சிப்பதில் தவறில்லை.
எனினும் முசலிப் பிரதேச வைத்தியசாலையில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி தமிழ் மக்களும் தான் மருந்தெடுக்கிறார்கள் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.