Breaking
Mon. Nov 25th, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வீட்டுக்கு அனுப்புவதையே நாம் முதலில் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் களமிறங்க வேண்டும் என்று அழைக்கின்றோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து அவருக்கு எதிராகக் குற்றப் பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

2014ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டுவரை மஹிந்த ராஜபக்ஷவின் நாசகார ஆட்சி இலங்கையில் தலைவிரித்தாடியது. அதை எதிர்த்துப் போராடவுள்ளேன் என்று பாசாங்கு செய்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால வெற்றி பெற்றார்.

இன்று மீண்டும் மஹிந்தவிடம் சரணாகதி அடைந்துவிட்டார். மீண்டும் ஜனாதிபதி பதவியில் அமரும் நோக்குடன் அவர் மஹிந்தவைப் பிரதமராக்கி அரசியல் சதித் திட்ட வேலையை செய்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் சூழ்ச்சியால் நாட்டில் மீதமிருந்த ஜனநாயகமும் அழிந்து விட்டது. நாடு சீரழிய ஆரம்பித்துள்ளது.
225 எம்.பிக்களும் ஓரணியில் வந்து கோரினாலும் ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன் என்று மைத்திரி தொடர்ந்து கூறி வருகின்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் தான் விரும்பும் நபரையே பிரதமராக நியமிப்பேன் என மைத்திரி அடம்பிடிப்பார். அவர் ஜனாதிபதி பதவியிலிருக்கும் வரை இந்த எதேச்சதிகார அரசியல் தொடரும்.

மைத்திரிபால சிறிசேனவை வீட்டுக்கு அனுப்பும் வேலையை நாம் பார்க்க வேண்டும்.
மைத்திரிபால சிறிசேனவின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து அவருக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைக்கத் தீர்மானித்துள்ளோம்.
எனினும், அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றில் தேவை. அதாவது 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மைத்திரி பிரதமராக நியமித்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், அவர் தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராகவும் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 123 எம்.பிக்கள் வாக்களித்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.

எனவே, குமார வெல்கம உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் 27 பேரையாவது இணைத்து கொண்டு 150 எம்.பிக்கள் சகிதம் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான குற்றப் பிரேரணையை நிறைவேற்ற நாம் திடசங்கற்பம் பூணவேண்டும்.

அதை விடுத்து ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கும் நடவடிக்கையில் இறங்கினால் இப்போதைக்கு ஒன்றும் நடக்காது. ரணிலைப் பிரதமராக்கும் நடவடிக்கையை நாம் எதிர்க்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *