கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி மொறட்டுவை பொறியியல் பீடத்துக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்க முயன்ற மாணவனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதிக்காத நிலையில் இலங்கை மனித உரிமைகள்ஆணைக்குழுவினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார், எமில் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் உயர்தரப் பரீட்சைக்கு கடந்த வருடம் இரண்டாவது தடவை தோற்றியுள்ளார்.
இதன்போது, பொறியியல் பீடத்துக்கு விண்ணப்பிப்பதற்கு உரிய புள்ளிகளை பெற்றதால் இணையம் மூலம் விண்ணப்பிக்க முயன்ற போது அவரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையம் அவரை அனுமதிக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனும், பெற்றோரும் நேரடியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால், குறித்த மாணவன் முதல் தடவை உயர்தரத்திற்கு இணையத்தினூடாக விண்ணப்பித்து உள்ளதாகவும், அதன்படி முதல் தடவையிலேயே அவருக்கு வேறொரு பாடநெறி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கேட்ட மாணவரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்ததுடன் தனது மகன் விண்ணப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இதனை தாம் விசாரிப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனமுடைந்த நிலையில் இருந்த பெற்றோரும், மாணவனும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் உதவியை நாடினர்.
ஆணைக்குழுவின் அதீத முயற்சியின் விளைவாக, குறித்த மாணவன் அது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டு அங்கு குறித்த மாணவன் முன்பு விண்ணப்பித்தமைக்கு சான்றுகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருத்தினால் குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து மாணவனும், பெற்றோரும் ஆணைக்குழுவிற்கு நேரடியாக வருகை தந்து பொறியியல் பிரிவில் பல்கலைகழகத்திற்கு செல்ல அனுமதியை பெற்றிருந்ததை தெரிவித்திருந்தனர்.
விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்ஷன மேற்பார்வையில் சட்டத்தரணி ஆர்.எல். வசந்தராசா முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.