Breaking
Mon. Nov 25th, 2024

(சுஜப்)

நாளாந்தப்பணிகளை முடித்து விட்டு சற்று ஓய்வு எடுப்பதற்காக வீதியில் நின்ற என்னை ஒக்டோபர் 26 “ஏழு” மணியளவில் வந்த தொலைபேசித்தகவல் நிலத்தில் தூக்கிவாரிப் போட்டது.

மாமா…மஹிந்த பிரதமராகி விட்டார் நீங்கள் எங்கே? உங்கள் அமைச்சர் கொழும்பிலா? என்று எனது சகோதரியின் மகன் பியாஸ் கேட்டார். கிண்ணியாவிலிருக்கும் அவன், கொழும்பிலுள்ள எனக்கு, அதுவும் ஒரு மாணவன் சொல்லும் செய்தியா இது? அந்த வியப்பில் வியர்த்தவாறு, வீடு நோக்கி விரைந்தேன். என் விரைவிலும் ஒரு வியப்பு எனக்குள் விறைத்திருந்தது. முழு நேரமும் அரசியல் செய்திக்காக அலையும் எனக்குக் கிடைக்காத தகவல் க.பொ. த.(சாதாரண) தரம் எழுதும் மருமகனுக்குக் கிடைத்திருக்குமா? அவன் சொன்ன செய்தி உண்மைதானா? இதற்கு அரசியலமைப்பில் இடமிருக்குமா? அவ்வாறானால்19 ஆவது திருத்தம் எதற்கு? என்ற கேள்விக் கணைகள் என்னைக் குடைந்ததால் நெஞ்சைப் பொத்திப் பிடித்தவாறு வீடு வந்தேன். வீதியிலிருந்து வீடு வருவதற்கான ஐந்து நிமிட இடைவெளிக்குள் ஏற்பட்டிருந்த பதற்றத்தை எனது மனைவியின் மனம் படம் பிடித்தது. எல்லாம் நடந்து விட்டது. எதையும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றார் மனைவியார்.அவரின் ஆறுதல் மொழிகள் என்னை ஆற்றுப்படுத்தினாலும் பொறுமைப் படுத்தவில்லை.விடயம் தெரிந்த எவரைக் கேட்டாலும் ஆச்சரியத்துடன் அவர்கள் இமை விரித்த காட்சிகள் இரை தேடிப்பறக்க ஆயத்தமாகும் மயிலின் இறக்கைகள் போன்று காட்சியளித்தன. அன்றிலிருந்து ஆரம்பமான சட்ட வல்லுநர்களின் வியாக்கியானங்கள், விளக்கங்கள் நானும் ஒரு சட்டத்தரணியாக இருந்திருக்கலாமே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திற்று. நான் மட்டுமா? வீதிகளில், தெருக்களில் எத்தனையோ சட்டத்தரணிகள் புதிதாக முளைத்து தங்களின் கட்சிக்குச் சார்பான மற்றும் தன் விருப்புக்கு இசைவான சட்ட வியாக்கியானங்களைச் செய்து கொண்டிருந்தனர். கோட்டிலும் சட்டத்தரணிகள்; ரோட்டிலும் சட்டத்தரணிகள். ஐயோ,ஆண்டவா! விவாதங்கள், வியாக்கியானங்களைக் கேட்டுக்கேட்டு செவிப்பறை வெடித்து விடுமே? இதற்கு ஒரு விடிவு கிட்டாதா?,விடை கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் நாட்கள் நகர்ந்தன.காலம் பதில் சொல்லும்தானே! நம்பிக்கையோடு இருப்போம். இந்த நம்பிக்கையில் நாட்கள் நகர்கையில் மற்றொரு சிறிய இதய அதிர்ச்சியாக பாராளுமன்றம் இடை நிறுத்தப்பட்டது. நிறைவேற்று அதிகாரத்தின் நிஜம்கள் நீங்கவில்லையா? என்ற நிசப்தத்தை இந்த prorogue நாட்டில் ஏற்படுத்தியது. இவ்வாறான சந்தேகங்கள் மெல்லிய கீற்றுப்போல் இதயத்தில் இழையோடுகையில் அந்த விடைக்கு முன்னர் இன்னும் ஒரு தலையிடிச் செய்தி வந்தது.

புதிய பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் நவம்பர் 09 இல் பாராளுமன்றமும் கலைக்கப் பட்டது. நல்லாட்சி அரசுக்கு வந்த சோதனையின் வேதனை இரட்டிப்பாகிவிட்டதே. 61 இலட்சம் பேரின் ஆணைகள்,மண்கோபுரம் சரிந்தது போல,மக்களின் நம்பிக்கையும் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ந்து கிடந்தன. நீதித்துறை, நிர்வாகத்துறை, நிறைவேற்று அதிகாரம் மூன்றும் முட்டிக் கொள்வது இந்திரலோகத்து தேவர்கள் சண்டை போன்றதா? கல்வியா? செல்வமா? வீரமா? எதை ஏற்றுக்கொள்வது.

இந்தப்பதற்றத்தால் பலருடனும் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டி ஏற்பட்டது. பிரபல சட்டத்தரணி ஒருவரிடம் விசாரித்தேன். பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியிடமிருந்து பாராளுமன்றம் எடுத்துக் கொள்வது சத்திரசிகிச்சைக்காக நோயாளி, வைத்தியர்கள் ஆகியோரிடையே இணக்கத்தைப் பெறுவது போன்றது என்றார். நோயாளியின் கையை வெட்டி அகற்ற வேண்டும். வைத்தியர்கள் தீர்மானித்து விட்டனர்.

நோயாளியின் ஒப்புத லையும் பெறவேண்டுமே? பாராளுமன்றத்தில்19 நிறைவேறிவிட்டது. சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி மக்களிடம் ஆணை கோர வேண்டுமே. நன்றாகவே இருந்தது சட்டத்தரணி நானாவின் உதாரணம். நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தவே 19 ஆவது திருத்தம். சட்ட வாக்கத்தை ஜனாதிபதி என்கின்ற தனிநபர் கட்டுப்படுத்த இயலாது.

பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களை வைத்தே நீதிமன்றங்களின் தீர்ப்பு அமைய வேண்டும் என்றார் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர். ஐக்கிய தேசிய கட்சி சார்பு சட்டத்தரணிகளின் நியாயமும் இதையொத்ததாகவே வெளிவந்தன. எனக்குத் தெரிந்த எல்லா ஐ.தே.க நண்பர்களிடமும் விசாரித்தேன்.

இந்தக் கருத்துடனே இருந்தனர். ஊடகவியலாளர்களைக் கேட்டேன். தமக்குக் கிடைப்பவற்றை வைத்து ஆரூடம் கூறினர் பலர். நாளாந்தம் சந்திக்கும் நெருங்கிய ஊடக நண்பர் லேக்ஹவுஸ் தௌபீக், அரசியலில் அதிக ஆர்வமுள்ள எழுத்தாளரும் பேச்சாளரும் கூட. நாட்டில் என்ன நடக்கும் என்று கேட்டேன். எனக்குப் பெரிதாக சட்டம் தெரியாது சுஐப். மரபுகள்,வழக்காறுகள்,ஏற்கனவே நடந்த வற்றை வைத்தும் சில நேரங்களில் தீர்ப்புக்கள் வரலாம் என்பார். பாராளுமன்றத்தினூடாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியையே, சட்டவாக்கத்துறை கட்டுப்படுத்த முடியும்.

நேரடியாக மக்களின் வாக்குகளால் தெரிவாகும் ஜனாதிபதியைக் கட்டுப்படுத்த முடியாது.சிறகுகள் முற்றாக வெட்டப்பட்டாலே பறக்க முடியாது, ஒரு சில சிறகுகளைப் பிடுங்கி பறவையின் ஆற்றலை முடமாக்க முடியுமா? என்றும் கேட்டார் தௌபீக். இதற்காகவாவது ஜே.வி.பியி ன் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியிருக்கலாம் என்று நான் எண்ணத் தோன்றியதும் இந்தக்காலத்திலேயே தான். தேர்தலுக்குச் செல்ல எல்லோரும் தயார்தான், அதிகாரமில்லாமல் வெறுங்கையுடன் செல்ல எவரும் தயாரில்லையே!

இதுவா இன்றைய பிரச்சினை. அல்லது ஐந்து வருட மக்கள் ஆணையை இடையில் கைவிட ஐக்கிய தேசிய கட்சி மறுப்பதா? இப் பிணக்குகளுக்கு அடிப்படை. 225 எம்பிக்கள் ஒப்பமிட்டாலும் ரணிலைப் பிரதமராக்க முடியாது என்கிறார் ஜனாதிபதி. பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவைப் பெற்றாலும் அரசாங்கத்தலைவரின் நம்பிக்கையைப் பெறுவதும் பிரதமருக்கான தகைமைதான்.

ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால் பிரதமரின் அதிகாரங்கள் வெளியில் தெரிவதில்லை.ஜேஆரின் கீழ் பிரேமதாசா, பின்னர் பிரேமதாசாவுக்கு கீழ்,டிபி.விஜயதுங்க, அதற்குப் பிற்பாடு சந்திரிக்காவின் கீழ் சிறிமா, பின்னர், மஹிந்த. இவ்வாறு சென்று பின்பு மஹிந்தவின் கீழ் ரத்னசிறி, டிஎம்.ஜெயரத்ன. ஒரே கட்சியில் ஜனாதிபதியும் பிரதமரும் இருந்த இக்காலங்களில் பிரதமரின் அதிகாரங்கள் எவை? என்று எவருக்கும் தேவைப்பட்டதும் இல்லை.

தேவைப்படுவதுமில்லை. கட்சியின் தலைமையும் நிறைவேற்று அதிகாரத்தின் பிடியும் பிரதமர்களைப் பெட்டிப் பாம்பாக்கியதாலேயே, அவர்களுக்கு இந்நிலைமை. ஆனால் ஜனாதிபதி டி.பி விஜயதுங்கவின் கீழ்,பிரதமர் சந்திரிக்கா. பின்னர் ஜனாதிபதி சந்திரிக்காவின் தலைமையில் பிரதமர் ரணில். இப்போது மைத்திரி ஜனாதிபதி, ரணில் பிரதமர் இந்த கட்சி வேறுபாடுகள்தான் ஜனாதிபதியையும் பாராளுமன்றத்தையும் முரண்படவைக்கின்றன.

இந்த நிலைமைகளை கடந்த காலங்களில் அவதானித்த எனது அனுபவம் அமைச்சர் ரிஷாதுக்கு பல ஆலோசனைகளைச் சொல்ல வைத்தது. “மஹிந்தவுடன் இணைந்து செல்லுங்கள்”. எனது இந்திய ஊடக நண்பரகள் உட்பட நாமலுக்கு அரசியல் ரீதியில் நெருக்கமான முஸ்லிம் பெண்மணியும் என்னிடம் தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு, அமைச்சர் ரிஷாதை உடன் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்தார்.

ஆனால் அமைச்சர் ரிஷாத், இதில் மிகத் தெளிவாக இருந்தார். இதைக் கண்ணுற்ற நான் ஒரு கணத்தில் கதிகலங்கினேன். “எனக்கு சமூகம் முக்கியம், இரண்டாவது மக்கள் வழங்கிய அமானிதம் முக்கியம், மூன்றாவது எதேச்சாதிகாரத்தை எதிர்ப்பது முக்கியம், நான்காவது ஜனநாயத்தைக் காப்பது முக்கியம், ஐந்தாவது மக்கள் சக்திக்கு முன்னால் எந்த அதிகாரங்களும் நிலைக்காது என்பது முக்கியம், ஆறாவது முஸ்லிம்கள் நிலைமாறிகள் அல்லர் என்பதை நிரூபிப்பது முக்கியம் ,ஏழாவது சலுகைகளுக்கு சோரம் போக மாட்டோம் என்பதை உணர்த்துவது முக்கியம் என்ற ஏழு விடயங்களிலும் உறுதியாக இருந்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவன் ரிஷாத்

இந்த ஏழு விடயங்களை அறிந்ததாலோ! என்னவோ! ஐனாதிபதியும் ஏழு நாட்களுக்குள் தீர்வைத்தருகின்றேன் என்கிறாரோ! இறைவனே அனைத்தும் அறிந்தவன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *