சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி புதிய பிரதமரை நியமிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார்.
இதன்மூலம் ஒன்றரை மாதங்களாக பிரதமராக செயலாற்றிய மஹிந்தவின் பதவி பறி போகப் போவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தொடர் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்.
இரு கட்சிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது மஹிந்த தரப்புக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் புதிய பிரதமரை நியமிக்க, நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறும் அவர் கூறியிருந்தார்.
எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது, புதிய பிரதமரை நியமிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
இதையடுத்து, இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அவர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து கலந்துரையாடுவார்.
இதன் பின்னர், மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கம் செய்யும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்தவை பதவியில் இருந்து நீக்குவது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் பிரதமராக ஏற்றுக் கொள்ள போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.