Breaking
Sun. Nov 24th, 2024

வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார். 

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (29) விசாரணைக்கு வந்த போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா மற்றும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர ஆகியோருக்கு எதிராக படுகொலை சம்பவத்தின் சாட்சிகளை மறைப்பதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தது சம்பந்தமாக குற்றம்சாட்ட முடியும் என்று இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு மனிதக் கொலை சம்பந்தமானது என்றும், கொலைச் சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாவிடின் வேறு வழக்கு தொடருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து நீதவான் வினவிய போது பதிலளித்த இரகசியப் பொலிஸார்,

இந்த வழக்கு சம்பந்தமாக இதுவரை 1200 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 22 இலட்சம் தொலைபேசி அழைப்புக்கள் விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்த இரகசியப் பொலிஸார், இது ஒரு சிக்கலான விசாரணை என்றும் தெரிவித்தனர்.

வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பின் தொடர்ந்து சென்ற வாகனங்கள் மற்றும் நபர்கள் சம்பந்தமாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஊடாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அத்துடன் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த இடத்தால் பயணித்த நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் செயற்கைக்கோள் புகைப்படங்களை பெற்றுக் கொள்வதற்கு நாசா நிறுவனத்திடம் உதவி கேட்டுள்ளதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

விடயங்களை கருத்திற் கொண்ட நீதிமன்றம், இரகசியப் பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விசாரணைகள் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கையை சமர்பிப்பதற்கு எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 திகதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *