சிறை செல்லவும் தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறும் போது சபாநாயகர் இந்த அறிவிப்பு விடுத்துள்ளார்.
நீதியை நிலைநாட்டுவதற்காக சிறைக்குச் சென்று காற்சட்டை அணியவும் தயாராக இருக்கின்றேன் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் மீண்டும் கூடியது.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எழுப்பினார்.
சபாநாயகர் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார்.
இதற்காக சிறைக்குச் செல்ல வேண்டிவரும். எனவே காற்சட்டை அணிவதற்கு தயாராக இருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய,
“நான் எந்தவொரு போலி ஆவணத்தையும் தயாரிக்கவில்லை. விசாரணைகளுக்கு முகங்கொடுக்க தயாராகவே இருக்கின்றேன். நீதியை நிலைநாட்டியதற்காக ஜனநாயகத்தை பாதுகாத்ததற்காக ஜம்பர் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டால் அதையும் செய்வதற்கு தயார். நான் நடுநிலை தவறி செயற்படுகின்றேன் என்றால், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வாருங்கள்” என்றார்.