ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் தொலைபேசியில் உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 26ம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதன் முறையாக இருவரும் பேசியுள்ளனர்.
இந்த உரையாடல் சுமார் 10 நிமிடங்கள் வரையில் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்போது நாளைய தினம் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், கட்சி தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் இது குறித்து பேசுவோம் என ஜனாதிபதி பதிலளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். இதனால் கொழும்பு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அண்மையில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
எனினும், ஜனாதிபதி அதனை நிராகரித்திருந்தார். இவ்வாறான நிலையில், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மகிந்த தரப்பினருக்கு ஜனாதிபதி 24 மணி நேர கால அவகாசம் வழங்கியிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், கடந்த 26ஆம் திகதிக்கு பின்னர் இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், இதன் போது நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.