இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ச கடிதம் மூலம் அனுப்பி அறிவித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் சட்ட விரோத பிரதமர் பதவியை தான் வைத்திருப்பது தனது சுயமதிப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே பதவியை இராஜினாமா செய்கிறேன் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக இயக்குனரிடம் வினவ முற்பட்ட போது அவரது தொலைபேசி செயழிலந்து காணப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைத்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றினால் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ள நிலையில், மஹிந்தவின் ராஜினாமா தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்தவு ஆதரவான பெரும்பான்மை நிரூபிக்க முடியாத காரணத்தால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவுக்கு அமைய அடுத்து வரும் சில நாட்களில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது பதவி நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மை நிரூபித்து மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வார்.
இதனை முன்னரே அறிந்த கொண்ட மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு ஆதரவாக 63 உறுப்பினர்கள் மாத்திரமே கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.