(ஊடகப்பிரிவு)
வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க கட்சி, இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் புத்திசாதுரியமாக அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.
மன்னார் நகரில் நவீன கடைத்தொகுதிகளுடன் கூடிய பஸ் தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் (20) அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பிரதியமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ், மற்றும் மாகாண, உள்ளுராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட
இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது,
30 வருட அழிவையடுத்து 2009ம் ஆண்டு இந்தப் பிரதேசங்களில் அமைதி நிலை ஏற்பட்ட பின்னர் மன்னார் மாவட்டத்தை அழகுபடுத்த அப்போது நாம் எடுத்த முயற்சி சில காரணங்களினால் கைகூடாமல் போய்விட்டது. எனினும் பின்னைய காலங்களில் மாவட்ட அபிவிருத்தி சபையின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுக்கிணங்க, எனது அமைச்சான கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் அமைச்சரவைக்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தேன்.
இதனையடுத்து அந்த அமைச்சுக்கு வன்னி மாவட்ட அபிவிருத்திக்கென வரவு செலவுத் திட்டத்தில் 2500 மில்லியன் ஓதுக்கப்பட்டு தற்போது பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னார் நகர நிர்மாணப்பணிகளுக்கெனவும் அமைச்சர் சம்பிக்கவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சும் கைத்தொழில் வர்த்தக அமைச்சும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு தற்போது மன்னாரில் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ளோம். இந்த சந்தர்ப்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு மன்னார் மக்களின் சார்பில் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
இந்த அபிவிருத்திப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு வருகை தந்துள்ள அமைச்சர்களான மங்கள, மற்றும் சம்பிக்க ஆகியோரிடம் மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல் தேவைகளையும் பொருளாதார நிலைமைகளையும் நான் இன்று எடுத்துரைத்தேன். மீனவ சமுதாயத்தினதும் விவசாயிகளினதும் தொழிலை மேம்படுத்துவதற்காக பல்வேறு உதவிகளை மேற்கொண்டு தருவதற்கு அவர்கள் தற்போது உறுதியளித்தனர்.
மன்னார் நகர நிர்மாணப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவடையும் வகையில்; நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன் இந்த நகரத்தில் அழகான சுற்றுவட்ட சந்தையொன்றை நிர்மாணிப்பதற்கும் பூரண ஒத்துழைப்பை தருவதாக அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர். அத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையானது 83 மில்லியன் ரூபா செலவில் மன்னார் நகரத்தில் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இதைவிட நானாட்டான் நகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கi அமைச்சர் மங்கள சமரீரவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன். எதிர்வரும் காலங்களில் எஞ்சியிருக்கும் ஏனைய 3 பிரதேச சபைகளில் உள்ள நகரங்களை புனரமைக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.