முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் இன்றையதினம் ஆரம்பமாக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.
அந்தவகையில் பத்தரமுல்ல தாமரை வீதியில் அமைந்துள்ள பொதுஜன முன்னணியின் கட்சி தலைமையகத்திற்கு கோத்தபாய இன்றைய தினம் விஜயம் செய்ய உள்ளார்.
கோத்தபாய முதல் தடவையாக அரசியல் விவகாரங்களில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் பொதுஜன முன்னணி மாகாணசபை உறுப்பினர்களுக்கு கட்சி உறுப்புரிமை வழங்க உள்ளது.
கலைக்கப்பட்டுள்ள 3 மாகாணசபைகள் உள்ளிட்ட 9 மாகாணசபைகளிலும் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 90 வீதமான உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அதிகாரபூர்வமாக இணைந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள வருமாறு அனைத்து மாகாணசபை உறுப்பினாகளுக்கும் பொதுஜன முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டவர்களும் பங்கேற்க உள்ளனர்.
கோத்தபாய நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கும் ஓர் முனைப்பாக இன்றைய நிகழ்வு அமையும் என தெரிவிக்கப்படுகிறது.