(ஊடகப்பிரிவு)
யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ரூபா 9.8 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று காலை (25) இடம்பெற்ற போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.
இந்த நிதியானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினூடாக வாழ்வாதார முயற்சிகளுக்காக பகிர்ந்தளிக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேபோன்று வவுனியா, மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல் தேவைகளை நிவர்த்திப்பதற்காக, அவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்தும் வகையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, அந்த மாவட்ட மக்களுக்கும் நிதிகளை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
யுத்தத்தின் முன்னரான காலப்பகுதியில் வளங்கொழிக்கும் பூமியாக இருந்து, பின்னர் அழிவடைந்த வன்னி மாவட்டதை மீளக்கட்டியெழுப்புவதே அரசின் இலக்கு என்றும், தமது அமைச்சும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.