ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் கரைச்சிப்பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்து கொள்ள முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்சித்திட்டத்திற்கான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் முதன்மை விருந்தினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள், அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் அமர்ந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த கரைச்சிப்பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்து கொள்ளாது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரச அதிபர்கள், அமைச்சின் செயலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டதால் நிகழ்வின் ஏற்பாட்டு குழுவினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மேற்படி உறுப்பினர்களை சென்று அமருமாறு கூறியதையடுத்து இரண்டு உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளாது வெளியேறிச் சென்றுள்ளனர்.