சட்டத்தை வலுப்படுத்துவதே பிரஜைகளின் பொறுப்பு எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து தான் திருப்தியடைவதாகவும் சந்தியா எக்னேலிகொட தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர், சந்தியா எக்னேலிகொடவை நீதிமன்றத்திற்கு வைத்து கடுமையாக திட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன் அதனை ஆறு மாதங்களில் அனுபவித்து கழிக்க வேண்டும் என ஹோமாகமை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட சந்தியா, சட்டத்தை வலுப்படுத்துவது பிரஜைகளின் பொறுப்பு. அதனை என்னால் செய்ய முடிந்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து நான் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைக்கின்றேன். நீதிமன்றத்திற்குள் ஒரு பெண்ணை துன்புறுத்துவது குற்றம் என்பதை நாட்டில் உள்ள அனைவரும் அறிந்து கொள்வார்கள்.
எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்த பலர் இருக்கலாம். அனைவருக்கும் இது பாடமாக அமையும் என்றார்.