பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முஸ்லிம் மக்களின் பிரதான அமைப்பான ஜயம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர்களை சந்தித்து இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக கலந்துரையாடியுள்ளார்.
நாட்டின் பிரதான சமயம் சம்பந்தமாகவும், முஸ்லிம்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் செயற்பாடுகள், தெல்தெனிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து கோத்தபாய ராஜபக்ச இதன்போது கலந்துரையாடியுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி நடந்த இந்த சந்திப்பில் ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் எம்.எம்.முபாரக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய, பொதுபல சேனாவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், விமலஜோதி தேரரின் கோரிக்கைக்கு அமைய அந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும், உண்மையில் பொதுபல சேனா அமைப்பு யாருடன் இருக்கின்றது என்பதை தற்போது அறிந்து கொள்ள கூடியதாக இருப்பதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.
அதேவேளை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர்கள், ராஜபக்ச குடும்பத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் பிளவுகள் தொடர்பில் கோத்தபாயவிடம் வினவியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள கோத்தபாய, தமது குடும்பத்தினருடன் எந்த பிரச்சினைகளும் இல்லை எனவும், தமது தந்தை கூறியது போல் குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும் வரை குடும்பத்தின் பலத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்ற அடிப்படையில் தாம் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தபாய, அது குறித்து இதுவரை தான் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.