Breaking
Sun. Nov 24th, 2024

ஈரானிற்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கும் (Ayatollah Ali Khamenei) இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

டெஹரான் நகரில் நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதிக்கு சிநேகபூர்வமான வரவேற்பளித்தார்.

ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால உறவினை வலுவோடு முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது சுட்டிக்காட்டிய ஈரானின் ஆன்மீகத் தலைவர், இருநாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை போன்றே மக்களுக்கிடையிலும் தொடர்புகளை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

பூகோள ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களைக் கொண்டுள்ள இருநாடுகளும் தமது அபிவிருத்தி வாய்ப்புக்கள் குறித்தும் செயற்பட வேண்டுமெனவும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் தெரிவித்தார். மேலும் இலங்கை தேயிலை மீது தான் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இரு நாட்டு மக்களினதும் எண்ணங்களில் ஒற்றுமைகள் காணப்படுவதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் மூலமாக தாம் அறிந்துகொண்டதாகவும் ஈரானிய ஆன்மீகத் தலைவர் தெரிவித்தார்.

அதற்கமைய இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தி, சகோதர நாடுகளாக முன்னோக்கி செல்ல காணப்படும் வாய்ப்பினை சுட்டிக்காட்டிய ஈரானிய ஆன்மீகத் தலைவர், இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஆன்மீகத் தலைவர் என்ற வகையில் அவர் ஆற்றிவரும் பணிகளை பாராட்டியதுடன், பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகமே இலங்கையில் காணப்படுவதுடன், சமயக் கோட்பாடுகளின் ஊடாகவே சமூகத்தை நல்வழிப்படுத்த முடியுமெனவும் குறிப்பிட்டார்.

ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சியை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு அந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரானுக்கு அரசமுறை விஜயம் மேற்கொள்வதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கும் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, விருந்தோம்பல் தொடர்பாகவும் ஜனாதிபதி இதன்போது ஈரானிய ஆன்மீகத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *