Breaking
Mon. Nov 25th, 2024

மலேசியாவின் 7 ஆவது பிரதமராக 92 வயதான மஹதிர் முஹம்மட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன் தினம் (09) நடைபெற்ற மலேசியாவின் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர் உலகின் வயது முதிர்ந்த பிரதமராக வரலாற்றில் பதிவானார்.

மலேசிய நாட்டு மக்களுக்கு அரசியல் ரீதியில் மாற்றம் ஒன்று தேவைப்பட்டிருந்த நிலையில், ஆட்சியில் இருந்த பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு எதிராக மஹதிர் பின் முஹம்மட் போட்டியிட்டார்.

1981 ஆம் ஆண்டில் இருந்து 2003 ஆம் ஆண்டு வரை 22 வருடங்கள் மஹதிர் பின் முஹம்மட் நாட்டின் நிர்வாகத்தைக் கொண்டு சென்று மலேசியாவின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவராகக் கருதப்படுகின்றார்.

2003 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த மஹதிர் முஹம்மட், அதன் பின்னர் செயற்பாட்டு அரசியலில் இருந்து விடை பெறவில்லை.

பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மஹதிர் முஹமட் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு வரை UAMNO கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் 2016 ஆம் ஆண்டு மஹதீர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கினார்.

மலேசியாவின் பிரதான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு கூட்டமைப்பாக செயற்பட்ட இவர், 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டிருந்தார்.

முறையற்ற அரச நிதிப்பாவனை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு எதிராக மக்களின் அதிருப்தி அதிகரித்திருந்தது.

அதன்படி, நேற்று நடைபெற்ற தேர்தலில் 92 வயதான மஹதிர் முஹம்மட் வெற்றி பெற்றார்.

மலேசியப் பாராளுமன்றத்தில் 222 ஆசனங்களில் 112 ஆசனங்களைக் கைப்பற்றினால் ஆட்சியமைக்க முடியும் என்பதுடன், மஹதிர் தலைமையிலான கூட்டமைப்பு 121 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

நஜீப் ரசாக்கின் கட்சி 79 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது.

இதன் பிரகாரம், மலேசியாவின் 7 ஆவது பிரதமராக மஹதிர் முஹம்மட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *