ஊடகப்பிரிவு
“உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப் பாரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
AISEX மற்றும் FASE ஆடைத் தொழிற்துறைக்கான எக்ஸ்போ கண்காட்சியின் 08வது பதிப்பின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று (10) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்;.
இந்நிகழ்வில் இலங்கை ஆடை நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்டாஸ் பெர்னாண்டோ, கூட்டு ஆடை சங்க பேரவையின் செயலாளர் நாயகம் டுலி கூரே, மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உத்தியோகபூர்வ அதிகாரிகள் உட்பட பல உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆடை தொழில்துறைசார் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எங்கள் ஆடை உற்பத்தி துறையானது பெரிய ஏற்றுமதியாகும், உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்ச தரத்தில் உள்ளது. நாம் இவ்வாண்டு எங்கள் உலக வர்க்க ஆடை துறை மீது ஒரு திருப்புமுனை ஆண்டாக என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாண்டு முதல் காலாண்டில் மொத்த ஆடைகள் ஏற்றுமதி 04% சதவீதமாக அதிகரித்து, 1.26 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் 03 சதவீத அதிகரிப்புடன் 4.8 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டித்தந்துள்ளது. இலங்கை கைத்தொழிற்துறையில் முன்னணி வகிப்பது ஆடைத்தொழிலாகும். திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆடை தொடர்பாக இலங்கை பிரதான நாடாகியது.
இலங்கையின் ஆடைதொழில் துறையானது, நமது பொருளாதாரத்திற்கு முக்கியமானது. அத்துடன் உலகளாவிய வர்த்தக அமைப்பு முறைமைக்கும், தெற்காசியாவின் மற்றைய நாடுகளுடன் இலங்கையை ஒருங்கிணைப்பதற்கு முக்கியமாக காணப்படுகின்றது. ஆனால் நாம் மேலும் பல முன்னேற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது.
சர்வதேச உறவுகளை மேம்படுத்துவதற்கான எமது அரசாங்கத்தின் விசேட முயற்சிகள் வெற்றியடைந்ததுடன், எமது நாட்டு தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பெற்றுக்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் பாரிய வெற்றியை தந்துள்ளது. இதனால் எமது ஆடை ஏற்றுமதிகள் சிறப்பாக வலுப்படுத்தப்பட்டது.
இலங்கை ஏற்றுமதிதுறைக்கு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சியின் விளைவாக எமது ஆடை ஏற்றுமதிகள் கடந்த ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் 11.3 சதவிகிதமாக அதிகரித்து, 1.67 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டித்தந்துள்ளது. இலங்கையின் ஆடைகள் தரமானதால், வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. கடந்த தசாப்தங்களில் இலங்கையின் ஆடைகளுக்கு ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் பெரும் கேள்வி காணப்பட்டது. 2016 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் (2017) எமது ஆடைகள் வருமானம் அதிகரித்துள்ளது. இதேபோல இந்த வளர்ச்சி போக்கு தொடரும் என்று நம்புகிறோம், மேலும் அடுத்த ஆண்டு இன்னும் பல நல்ல செயல்திறன்களை எதிர்பார்க்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.