Breaking
Mon. Nov 25th, 2024

அதிபரின் மனித தன்மையற்ற அடாவடியான கடும் நெருக்கீடு காரணமாக மனமுடைந்து ஆசிரியை ஒருவர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆசிரியை நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு குமுழமுனையை பிறப்பிடமாகவும் யாழ். திருநெல்வேலியை வசிப்பிடாகவும் கொண்ட கொஜெயசீலன் கவிதா (வயது-40) என்ற தமிழ் பாட ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியிலுள்ள கலவன் பாடசாலை ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஆசிரியை கடமையாற்றியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாடசாலையின் அதிபர் ஆசிரியையை பழிவாங்கும் நோக்குடன் தொடர்ச்சியாக பல நெருக்கீடுகளைக் கொடுத்துவந்ததன் விளைவாக ஆசிரியை அப்பாடசாலையிலிருந்து கடந்த வாரம் இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

எனினும் குறித்த அதிபரால் ஆசிரியைக்குரிய ஆவணங்களை வழங்க மறுக்கப்பட்டதுடன், இடமாற்றம் பெற்றுச் சென்றாலும் தனது பாடசாலைக்கு வந்து மாலை நேரத்தில் கற்பிக்க வேண்டும் என்று நெருக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த பாடசாலையில் ஆசிரியை கடமையாற்றியதை உறுதிப்படுத்தும் சம்பள படிவம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை உறுதிப்படுத்தி வழங்காது நிறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த ஆசிரியையால் வலயக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்த உயரதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காது. அதிபர் பற்றி முறையிட்டதற்காக வலயக்கல்விப்பணிப்பாளரால் ஆசிரியை கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அதிபர்கள் வழமையாக எல்லா பாடசாலைகளிலும் ஆசிரியர்களுக்கு தொந்தரவு கொடுப்பது சாதாரண விடயம்தானே என கல்வி உயரதிகாரிகள் பொறுப்பற்றுப் பதிலளித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியையின் உயிரைப் பறித்த குற்றவாளி என கூறப்படும் அதிபரை காப்பாற்றுவதற்காக மாகாண கல்வித் திணைக்களம் நடத்துகின்ற போலியான விசாரணைகளை நிறுத்தி, வடமாகாணக் கல்வி அமைச்சு நேரடியாகத் தலையிட்டு நீதியான விசாரணைகளை நடத்த வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் கூறுகையில்,
குறித்த ஆசிரியைக்கு அதிபரால் தொந்தரவு இருந்திருக்கிறது. அது வழமையாக எல்லாப் பாடசாலைகளிலும் உள்ள சாதாரண விடயம்தானே. அதிபர்கள் ஆசிரியர்களைப் பேசுவது, ஏசுவது வழமையான விடயம்தானே. இது ஒரு சாதாரண விடயம்.
அவரது உயிரிழப்புக்கு இதுதான் காரணம் எனக் கூறமுடியாது.

ஆசிரியைக்கு நோய் இருந்ததென்று கூறப்படுகின்றது. அதன் காரணமாக அவர் இறந்திருக்கலாம்.
இது பற்றிய முறைப்பாடு அல்லது தகவல் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை. முறைப்பாடு வந்தால் அது பற்றிக் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

அண்மையில் கூட பூநகரி விக்னேஸ்வர வித்தியாலயத்தின் அதிபரால் அங்கு நடைபெற்ற கூட்டத்தின் போது, தொண்டர் ஆசிரியராகவிருந்து நியமனம் பெற்று சேவைக்கு வந்தவர்களை அவமதிக்கும் வகையில் இவர்களால் தான் கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் இறுதி நிலையில் இருக்கின்றது.

தொண்டர் ஆசிரியர் என்று இருப்பது போல தொண்டர் வைத்தியர் என்று யாராவது இருந்தால் நோயாளிகளின் நிலை என்னவாகும் அதே மாதிரித்தான் தொண்டர் ஆசிரியர்களால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
இதை வலயக்கல்விப்பணிப்பாளரே கூறியுள்ளார் என ஏளனமாக அனைவர் மத்தியிலும் கூறியதாக ஆசிரியர்களால் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படியான சம்பவங்கள் வட மாகாணத்தில் இடம்பெறுவதற்கு பொறுப்பு வாய்ந்தவர்களே காரணமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *