கோத்தபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியானால் அவருடன் இருக்கும் ‘மாபியா’ கும்பலே நாட்டை நிர்வகிக்கும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எச்சரித்தார்.
மஹிந்த ராஜபக்சவுக்குப் பதிலாக அவருடைய சகோதரர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினால் நன்றாக இருக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குப் பதிலாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கினால் நன்றாக இருக்கும் என சிலர் கருதுகின்றனர்.
ஆட்கள் மாறினாலும் அவர்களால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.
கோத்தபாய ஜனாதிபதியானால் அவருடன் இருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற மாபியா குழுவினரே நிர்வாகத்தை மேற்கொள்வார்கள்.
எனவேதான், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை இம்மாதம் மூன்றாவது வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் தெரிவித்தார்.
கொழும்பு பீ.ஆர்.சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜே.வி.பியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
ஜே.வி.பியின் மேதின ஊர்வலம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு பொரளை கம்பல் மைதானத்தில் ஆரம்பித்து பீ.ஆர்.சி மைதானத்தில் முடிவடைந்தது. அங்கு மாபெரும் மேதினக் கூட்டம் நடைபெற்றது.
இதில் இந்தியா, நேபாளம், சுவீடன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் கம்யூனிச கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.இம்மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய அநுரகுமார திசாநாயக்க,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையால் நாட்டில் யுத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இந்த முறையை ஒழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மஹிந்த ஆட்சியில் பாரிய மோசடி இடம்பெற்றதாகக் கூறி ஆட்சியை மாற்றினால், மைத்திரி-ரணில் ஆட்சியும் தோல்வியடைந்துள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பு என்பது ஒரு திருட்டுக் கும்பலில் இருந்து மற்றொரு திருட்டுக் கும்பலுக்கு நாட்டை ஒப்படைப்பதாகவே காணப்படுகிறது என்றார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டத்தை ஜே.வி.பி இம்மாத மூன்றாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறினார்.
இதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான நிலைப்பாட்டை தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கும், அதனூடாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இதனை நிறைவேற்றப் போராடவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, அரச மாளிகைகளிலேயே அதிகமான மோசடிகள் இடம்பெறுகின்றன. அண்மையில் ஜனாதிபதி செயலக பணியாட் தொகுதியின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் கைதுசெய்யப்பட்ட மற்றைய நபர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் ஜனாதிபதி செயலகப் பணியாட் தொகுதியின் தலைவராக இருந்தவர்.
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் ஜனாதிபதி செயலகப் பணியாட் தொகுதியின் தலைவராகவிருந்த காமினி செனரத் பாரிய மோசடி தொடர்பில் தேடப்பட்டு பின்னர் கைதுசெய்யப்பட்டார்.
அவர் பிரதமர் செயலகத்தின் பணியாட் தொகுதியின் தலைவருடைய வீட்டிலே ஒழித்திருந்தார் .ஜனாதிபதி செயலகத்தின் பணியாட் தொகுதி தலைவர்களுக்கும் மோசடிகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது.
இவர்கள் அனைவரும் ஜனாதிபதிமாரின் முகவர்களாக செயற்படுபவர்கள் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.