“தேசிய அரசுக்கு எதிராகப் பாரிய பிரசாரத்தை மேற்கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்ளும் முனைப்புடன் பொது எதிரணி செயற்படவேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கும், பொது எதிரணியினருக்குமிடையில் நடைபெற்றுள்ள முக்கிய சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“தற்போதைய அரசு தலைகளை மாற்றி ஒருவரை ஒருவர் மகிழ்விப்பதன் மூலம் அதிகாரத்தில் நீடிக்கப் பார்க்கின்றது. என்னதான் மாற்றங்களைச் செய்தாலும் முன்னோக்கிப் பயணிக்கமுடியாது.
நாங்கள் செல்லும் இடமெல்லாம் அரசைப் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு மக்கள் தெரிவிக்கின்றனர். கட்சி பேதம் மறந்து அரசை மக்கள் எதிர்க்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்ளும் பாரிய எதிர்ப்புச் செயற்பாட்டை பொது எதிரணி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க வேண்டும்” என்றும் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, காலியில் எதிரவரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பங்கேற்ற வைக்கவும் இந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.