வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்காக வருகைத்தந்திருந்த கைதி ஒருவர், வவுனியா சிறைச்சாலையில் சிறைக்காவலர்களும், நீண்ட காலமாக தடுப்பில் உள்ள சிறைக்கைதிகளும் இணைந்து செய்யும் அநீதிகள் தொடர்பாக நீதிவானிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக இன்று சென்ற போதே கைதி ஒருவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட விளக்கமறியலில் உள்ள கைதி ஒருவர் தனது கைகளை உயர்த்தி திறந்த நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சில விடயங்களை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதன் போது கடமையில் இருந்த பதில் நீதிவான் கைதிக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார்.
இதன் போது கைதி, வவுனியா சிறைச்சாலையில் கைதிகளிற்கு பல்வேறான அநீதிகள் இடம்பெறுவதாகவும், கைதிகள் நல்ல இடத்தில் உறங்குவதற்கு சுமார் 3000 ரூபாய் வரை பெறப்படுவதாகவும் அப்பணம் வழங்கப்படாவிட்டால் மலசல கூட பகுதியிலேயே தங்கவிடப்படுவதாகவும் கூறியுள்ளார்.
சிறைச்சாலைக்குள் புகையிலை, போதைப்பொருள் பாவனை யும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
சிறைக்காவலர்களும், நீண்ட நாள் கைதிகளாக இருப்பவர்களும் இணைந்தே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன் போது அனைத்து சட்டத்தரணிகளும் எழுந்து குறித்த கைதி சுட்டிக்காட்டும் பிரச்சினை சிறைச்சாலையில் இடம்பெறுவதாக தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, இந்நிலையில் பதில் நீதிவான் அன்ரன் புனிதநாயகம், வவுனியா சிறைச்சாலை பொறுப்பதிகாரியை நீதிமன்றத்திற்கு அழைத்து குறித்த கைதி தெரிவித்த கருத்தினை சுட்டிக்காட்டி இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்திருந்தார்.