Breaking
Mon. Nov 25th, 2024

(ஊடகப்பிரிவு)
கொழும்பிலே கூடி மகிழ்ந்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அபிவிருத்தித் தேவைகளையும், இன்னோரன்ன உதவிகளையும் பெற்றுவரும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், இந்தப் பிரதேசங்களில் அவரைப் பற்றிய பிழையான எண்ணங்களை மக்கள் மத்தியில் சித்தரித்து, வேற்றுமைகளை வளர்த்து வருவதாக முல்லைத்தீவு, மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் (நந்தன்) தெரிவித்தார்.

மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு, பாண்டியங்குளம் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (04) இடம்பெற்றது. இந்த விழாவில் தலைமை வகித்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், உரையாற்றிய தவிசாளர் மேலும் கூறியதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாந்தை கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், பிழையாக வழிநடாத்தப்பட்டு இந்த நிகழ்வை பகிஷ்கரித்திருப்பது வேதனையானது. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் நடாத்தப்பட்ட விழாக்களில், மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களான நாங்கள் மிகவும் கண்ணியமாகவும், இதய சுத்தியுடனும் பங்கேற்றிருக்கின்றோம்.

இது ஒரு கட்சிக்குரிய பிரதேச சபையும் அல்ல. அவ்வாறானதொரு நிகழ்வும் அல்ல. மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் சபையாகும். எனவே, இது ஒரு தேர்தல் நிகழ்வல்ல என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

யுத்தம் முடிவடைந்து இந்தப் பிரதேசத்தில் நாங்கள் மிகவும் துன்பங்களுடன் வாழ்ந்த போது, 2011 ஆம் ஆண்டு அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, முல்லைத்தீவு பாலி நகரில் சந்தித்தோம். அன்று தொடக்கம் அவருடனான எனது அரசியல் பயணம் ஆரம்பமாகியது.

நாங்கள் பட்ட கஷ்டங்களை நேரில் அறிந்துகொண்ட அவர், எங்களது கோரிக்கைகள் சிலவற்றை உடன் நிறைவேற்றித் தந்தார். வீடுகள் இன்றி, வாழ்வாதார வசதிகள் இன்றி, பயணிக்கப் பாதையின்றி பரிதவித்துக் கொண்டிருந்த எமக்கு, அவர் கை கொடுத்தார்.

விவசாய நடவடிக்கைகளுக்காக சிறிய உழவு இயந்திரங்கள் மற்றும் இயந்திராதிகளை வழங்கினார். இந்திய அரசின் உதவியுடன் உழவு இயந்திரங்களையும் விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுத்த அவர், ஆங்காங்கே வீட்டுத் திட்டங்களையும் பெற்றுத் தந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தில் வலுவான, அதிகாரமிக்க அமைச்சராகப் பணியாற்றியதனால், தமிழ் மக்களாகிய எங்களுக்கு அவர் பல்வேறு வழிகளில் உதவினார்.
இடிந்துபோன கட்டிடங்களையும், தூர்ந்துபோன குளங்களையும், உடைந்து கிடந்த பாடசாலைகளையும், சின்னாபின்னமாக்கப்பட்டிருந்த மதஸ்தலங்களையும் புனரமைக்க அவர் பட்ட கஷ்டங்களை நாம் அறிவோம். பாதிக்கப்பட்ட எமக்கு எவரும் உதவிக்கு வராத நிலையில், அவர் இந்தப் பிரதேசத்துக்கு வந்து எமக்கு உதவியவர். இந்த அபிவிருத்திகளுக்கு எவருமே உரிமை கோர முடியாது. அவருடன் ஒன்றாகப் பயணித்தவன் என்ற வகையில், எம்மிடம் அதற்கான சான்றுகள் எத்தனையோ உண்டு. சிலர் நன்றி மறந்தவர்களாக இருக்கலாம்.
தேர்தல் காலங்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தமிழ் மக்களிடமிருந்து பிரித்தெடுப்பதற்காக, வேற்றுப் பார்வையுடன் பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெரும்பாலான ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

ஆட்சியமைப்பதிலும் எமது கட்சிக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகள் இருந்த போதும், ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவுடன் அதிகாரத்தைப் பெற்றுகொண்டோம்.
எம்மைப் பொறுத்தவரையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், இந்தப் பிரதேசத்தில் நேர்மையான பரிபாலனத்தை மேற்கொள்வோம்.

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், நாங்கள் பணியாற்றுவோம் என நான் இச்சந்தர்ப்பத்தில் உறுதியளிக்கின்றேன்.
சில அரசியல் அதிகாரிகள், மாற்றுக்கட்சி அரசியல்வாதிகளின் வலைக்குள் சிக்கிக்கொண்டு, எமது பணிகளை நிறைவேற்றத் தடையாக இருக்கக் கூடாது, கடந்த காலங்களில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டோர், தங்களை திருத்திக்கொண்டு எமது பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்று தவிசாளர் தயானந்தன் கூறினார்.

இந்த விழாவில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மன்னார் மாந்தை மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் செல்லத்தம்பு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் ஆகியோரும் உரையாற்றினர். மல்லாவி சிவபுரம் ஆலய குருக்கள் ஆகியோரும் ஆசியுரை நிகழ்த்தினர். பாலிநகர் பாடசாலை மாணவிகள் பேன்ட் வாத்தியம் இசைத்ததுடன், வரவேற்புரையை பிரதேச சபைச் செயலாளர் பாஸ்கரமூர்த்தி சிவபாலசங்கர் நிகழ்த்தினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *