பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்தவாரம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்பதாக புதன்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதமரு டன் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் முன்னாள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தனவும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள தனது விஜயம் குறித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு விளக்கமளித்திருக்கிறார். அத்துடன் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பாகவும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்குதல் பாராளுமன்றத்தைப் பலப்படுத்துதல் மற்றும் அதிகாரத்தைப் பகிர்தல் ஆகிய மூன்று விடயங்களுக்கே புதிய அரசியலமைப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி தேர்தல் முறை மாற்றம் இதில் பிரதானமாக உள்ளடக்கப்பட்டிருந்தாலும், மேற்குறித்த மூன்று விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கியுள்ளார்.
இது இவ்வாறிருக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டமை தொடர்பாக தினேஷ் குணவர்த்தன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்குப் பதிலளித்த பிரதமர் இது தொடர்பில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவதாக தெரிவித்திருக்கிறார்.