பிரதான செய்திகள்

வவுனியாவில் வியாபார வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு.

அகில இலங்கை ரீதியாக செயல்படுத்தப்பட்டுவரும் உணவுப் பாதுகாப்பு வாரம் வவுனியாவில் கடந்த 16ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிவரை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். லவன் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் க.தியாகலிங்கத்தின் நெறிப்படுத்தலில் உணவகங்கள், வெதுப்பகங்கள், வியாபார வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பரிசோதனை நடவடிக்கைகளில் எட்டு பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இரு வாகனங்களில் அதிகாலை 4 மணி தொடக்கம் இரவு 9 மணிவரையான காலப்பகுதிகளில் இத்திடீர் பரிசோதனைகள் மேற்கொண்டதாக மேற்பார்வை பொதுப்பரிசோதகர் க. தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கும்போது,
இந்நடவடிக்கையின்போது, 19 உணவகங்கள், 6 வெதுப்பகங்கள், 3 சுப்பர் மார்க்கட்கள், 29 பலசரக்கு வர்த்தக வியாபார நிலையங்கள், 28 வீதியோர வியாபார நிலையங்கள் என்பன சுற்றிவளைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சுகாதார நலத்திற்கு ஒவ்வாத நிலையின் கீழ் உணவுகள் தயாரித்தமைக்காக 16 நீதிமன்ற வழக்குகளும் இறந்த எலியின் உடலுடனும் எலி எச்சத்துடனும் உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமைக்காக 3 நீதிமன்ற வழக்குகளும், பூச்சி மொய்த்த பூஞ்ஞனம் பிடித்த நிலையில் உணவுகளை வைத்திருந்தமைக்காக 4 நீதிமன்ற வழக்குகளும் காலாவதியான முடிவடைந்த உணவுப் பொருட்களை விற்பனைக்காக வெளிக்காட்டி வைத்திருந்தமைக்காக 9 நீதிமன்ற வழக்குகளும் வவுனியா நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் தண்டம் அறவிடப்பட்டன.

இக்காலப்பகுதியில் மொத்தமாக 1597 உணவுகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றக் கட்டளையின் பின்னர் அவை அழிக்கப்பட்டன.

அத்துடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் அங்குள்ள பணியாளர்களுக்கும் என இரு சுகாதாரக்கருத்தரங்குகளும் பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளையும் வழங்கியிருந்தனர் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் இரண்டு அமைப்புகளுக்கு விஷேட தடை! ஜனாதிபதி

wpengine

அரச அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Maash

ஏன் இந்த கொள்கலனுக்கு விஷேட அதிரடி படை பாதுகாப்பு பலர் கேள்வி

wpengine