Breaking
Mon. Nov 25th, 2024

மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

குறித்த போராட்டம் மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவில் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விபத்தினால் படுகாயமடைந்து நடப்பதற்கு முடியாத நிலையில் உள்ள தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி க.கிருபாகரன் என்ற ஆசிரியர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,
கல்லடியை சேர்ந்த குறித்த ஆசிரியர், கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் பத்து வருடமாக ஆசிரியராக கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொண்டு வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நடந்த விபத்தில் 10 மாதங்கள் நடக்கமுடியாத நிலையில் இருந்துள்ளார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளரிடம் தனக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் குறித்த ஆசிரியர் தெரிவித்தார்.

அதற்கு வலய கல்விப்பணிப்பாளர் நிரந்தர இடமாற்றம் வழங்கமுடியாது என தெரிவித்திருந்ததாகவும், தற்காலிகமாக இடமாற்றம் வழங்குவதாக தெரிவித்து கல்லடிக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இடமாற்றம் வழங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்த நிலையில் மீண்டும் தனக்கு இடமாற்றம் வழங்க வலயக் கல்விப் பணிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆளுநரிடம் சென்று தனது நிலமையினை தெரிவித்த போது அது தொடர்பில் ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசென்றதாகவும், கல்வி அமைச்சின் செயலாளர் வலய கல்விப்பணிப்பாளிரின் கடிதம் ஒன்றை பெற்றுவருமாறு கூறியதாகவும் குறித்த ஆசிரியர் தெரிவித்தார்.

இதன்போது தனது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்கான இடமாற்றத்தினை பெற்றுத்தரும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரனிடம் கேட்டபோது,
கல்வி அமைச்சின் செயலாளர் 28.03.2018 அன்று தொடக்கம் எந்தவித இடமாற்றங்களையும் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியதன் காரணமாகவே அவருக்கு இடமாற்றம் வழங்கமுடியாமல் போனதாக தெரிவித்தார்.

அத்துடன் அவருக்கு இடமாற்றம் தேவையென்றால் அது தொடர்பாக எழுத்து மூலமாக தனக்கு அறிவிக்கப்படும்போது அது தொடர்பில் கல்வி அமைச்சின் அனுமதியை பெறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

போலியான வகையில் குறித்த ஆசிரியர் இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாகவும் வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *