சவூதி அரேபியாவுக்குப் பணிப் பெண்ணாகச் சென்ற இளம் தாய் ஒருவர் எட்டு வருடங்களின் பின்னர் சடலமாக வந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆதிவாசிகள் குடியிருக்கும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீலாக்கேணி எனும் கிராமத்தைச்சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான மாணிக்கராஜா காளிஸ்வரி (வயது 37 ) என்பவரின் சடலமே இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது.
தனது குடும்ப கஷ்டம் காரணமாக உள்ளூரைச் சேர்ந்த வெளிநாட்டுக்கு பணிப்பெண்களை அனுப்பி வைக்கும் முகவர் ஒருவருடைய உதவியுடன் கடந்த 2007ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக இவர் சென்றுள்ளார்.
சவூதிக்குப் போன காளிஸ்வரி தனது பிள்ளைகளுக்கு இரண்டு மாதங்கள் மாத்திரமே 19.500 ரூபா வீதம் பணம் அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பின் அவரிடமிருந்து எந்த தகவலும் வராத நிலையில் அவருடைய கணவர் நவரட்ணராஜாவும் காளிஸ்வரியின் சகோதரர் காளியப்புவும் நல்லூரிலுள்ள உள்ளூர் முகவரிடம் சென்று விசாரித்த போது மேற்படி முகவர் அப்பெண் வெளிநாட்டுக்குச் சென்ற ஆவணங்களை அவர்களிடம் கையளித்துள்ளார்.
கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக காளிஸ்வரிக்கு என்ன நடந்தது என்று அறிய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு கடந்த 7ம் திகதி நல்லூர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரிடமிருந்து செய்தியொன்று வந்திருக்கிறது.
நீலாக்கேணியைச் சேர்ந்த ஒருவருடைய பிரேதப் பெட்டி கொழும்புக்கு வந்திருக்கிறதென புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒருவர் தமக்குத் தெரிவித்ததாக கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் அவர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.
தெளிவற்ற செய்தியினால் கலங்கிப்போன காளிஸ்வரியின் குடும்பத்தினர் இச்செய்தி பற்றி யாரிடம் விசாரிப்பது. எவரிடம் கேட்டறிவதெனத் தெரியாத நிலையில் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் பற்றி காளிஸ்வரியின் சகோதரர் காளியப்பு குறிப்பிடுகையில்,
2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் எனது சகோதரியின் இரு பிள்ளைகளான ஸ்ரீமுருகன் (வயது 5) ஸ்ரீப்பிரியா ஆகிய இருவரும் (வயது 3) இறந்து போனார்கள்.
கணவர் த. நவரட்ணராஜா எரிகாயங்களுக்கு உள்ளாகி தங்கி வாழும் நிலை ஏற்பட்டது. குடும்ப கஷ்டம் காரணமாக உயிருடன் உள்ள தன் மூன்று பிள்ளைகளையும் கணவரையும் காப்பாற்ற தனது மூத்த சகோதரியான மாணிக்கராஜா காளிஸ்வரி என்ற பெயரில் வெளிநாடு சென்றார்.
தன்னிடம் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அக்கா காளிஸ்வரியின் பெயரில் கடவுச்சீட்டுப் பெற்றே வெளிநாடு சென்றார்.
அவருடைய உண்மையான பெயர் மாணிக்க ராஜா அன்னக்கிளி.
மூதூர் – நல்லூரைச் சேர்ந்த உள்ளூர் முகவர் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த உதவி முகவர் இருவரும் சேர்ந்தே எனது சகோதரியை சவூதிக்கு அனுப்பி வைத்தார்கள்.
இவர்களுக்கு உண்மை தெரிந்திருந்தும் எமக்கு மறைத்து விட்டார்கள். எம்மை ஏமாற்றி விட்டார்கள். இவர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரவுள்ளோமென அவர் தெரிவித்தார்.
இப்பரிதாபச் சம்பவத்தினால் ஆதி வாசிகள் வாழும் அக்கிராமமே அதிர்ச்சியடைந்துள்ளது.