ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியை தான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் சுதந்திர கட்சியை கட்டியெழுப்பும் எந்தவொரு நபருக்கும் நேரடியாக ஆதரவு வழங்கத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர கட்சி தற்போது முழுமையான யானையினால் உணவாக்கப்பட்டுள்ளது. யானை முழுமையாக விழுங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெயர் பலகை அப்படியே உள்ள போதும், உள்ளே ஒன்றும் இல்லை. கட்சியில் ஒழுக்கம் இல்லை.வேலைத்திட்டங்கள் இல்லை. கொள்கைகள் இல்லை. எதிர்கால திட்டம் இல்லை.
இவ்வாறான நிலயில் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டும் என மஹிந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை இழந்து போன ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றும் முழு முயற்சியில் மஹிந்த தலைமையிலான குழுவினர் முயன்று வருகின்றனர்.
பிளவுபட்டுள்ள சுதந்திர கட்சியினை உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவினை பெற்றுக்கொள்ள மஹிந்த தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்.
இந்த நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளனர். பல சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு சிறந்த கவனிப்புகள் மூலம் மஹிந்தவின் பக்கம் கொண்டு வரப்படும் சமரசம் வெற்றி பெற்றுள்ளது.
தென்னிலங்கை அரசியல் தற்போது ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. இதனை பயன்படுத்தி தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வை மஹிந்த முன்னெடுத்து வருகிறார்.
பிளவுபட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் மஹிந்த தனிக்கட்சி அமைத்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முழுமையான தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது மஹிந்தவின் எண்ணமாக உள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போதுள்ள ஸ்திரமன்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தி, மைத்திரி – ரணில் கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மஹிந்த மீதான மக்களின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், பாரியதொரு வெற்றியை மஹிந்த பெற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில் புலி போல் பதுங்கியிருந்து சரியான சமயத்தில் பாய்வதுடன், ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலத்தை சிதைப்பது மஹிந்தவின் திட்டமாக உள்ளது.
இதனடிப்படையில் பிரதமர் பதவி மற்றும் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க மறுத்து, தன்னை சாதாரண அரசியல்வாதியாக காட்டிக் கொள்ள மஹிந்த முயற்சித்து வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.