(Irshad Rahumadullah)
புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை சமூகங்களின் உரிமை தொடர்பில் பேசுவதற்கு தகுதியான கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று மாறியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதம அமைப்பாளரும், தொழிலதிபருமான ஏ.ஆர்.அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்ட கிராமங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளைகளை அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு தொடர்பில் சில அரசியல் பின்னடைவு சக்திகள் குறைத்து மதிப்பிட்டுவருகின்றன.தமக்கு நீண்டகால அரசியல் முகவரியிருப்பதாக தெரிவித்து கொண்டு ஆட்சியில் இருக்கும் கட்சிகள் இந்த புத்தளத்து மக்களுக்கு பெற்றுக் கொடுத்தவை தொடர்பில் அவர்கள் தங்களை சுய விமர்சனத்துக்கு உள்ளாக்கியாக வேண்டிய காலத்தில் உள்ளதாகவும் அலி சப்ரி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று நாட்டின் எல்லா பகுதிகளிலும் தமது அரசியல் செயற்பாட்டை விஸ்தரித்துள்ளது.நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எமது கட்சி 33 ஆயிரம் வாக்குகளை பெற்றது.இன்னும் சில வாக்குகள் பெற்றிருந்தால் ஒரு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அங்கு பெற்றிருக்க முடியும்.
அதே போல் புத்தளம் மாவட்டத்தில் எமது கட்சி சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஒரு பிரதி நிதித்துவத்தை இழக்க நேரிட்டது.இந்த நிலையில் புத்தளம் மாவட்ட மக்களினது எதிர்பார்ப்புக்களுக்கு இடம் கொடுத்து தமது கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியலை வழங்கி கௌரவித்தமை வரவேற்புக்குரியதாகும்.
இந்த நிலையில் எமது மாவட்ட மக்களது உரிமைகளை பாதுகாத்து, தேவையான அபிவிருத்திகளை கொண்டு வருவதற்கு எமது கட்சியின் கிளைகள் ஊடாக நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக பிரதம அமைப்பாளர் ஏ.ஆர்.அலி சப்ரி தெரிவித்துள்ளார்.