மழை விட்டாலும் தூவானம் நிற்காதது போல பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட கொழும்பு அரசியலில் பரபரப்பு அடங்கவில்லை.
2015ல் அமைக்கப்பட்ட கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியான நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. கூட்டு அரசாங்கத்தை நிம்மதியாக இருக்க விடுவதில்லை என்பதில் கூட்டு எதிரணி உறுதியாக இருக்கிறது.
மாறி மாறி பிரச்சினைகளைத் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தால் அதனைத் தீர்ப்பதில் தான் அரசாங்கம் கவனம் செலுத்தும். தீர்க்கப்பட வேண்டிய அவசியமான பிரச்சினைகளின் மீதோ அடையப்பட வேண்டிய இலக்குகளின் மீதோ அதன் கவனம் இருக்காது.
அதனை நன்றாக கணித்து கூட்டு எதிரணி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறது. அதாவது கூட்டு அரசாங்கத்தை தற்காப்பு ஆட்டத்தை மட்டும் ஆடுகின்ற நிலைக்குள் தள்ளி விட்டிருக்கிறது.
இது ஒரு வகையில் கூட்டு எதிரணியின் வெற்றி தான் ஏனென்றால் கூட்டு அரசாங்கம் தனது இலக்குகளை எட்ட முடியாமல் போவது அதன் தோல்விக்குச் சமம்.
தோல்வியுற்ற ஒரு அரசாங்கமாக இதனைக் காட்டுவதற்கு அதனை தற்காப்பு நிலைக்குள் வைத்திருப்பது முக்கியம்.
இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சிகளில் கூட்டு எதிரணி தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் இதனை தற்காப்பு நிலையில் இருந்து வெளியே வராமல் தடுப்பதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
இந்தநிலையில் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் தொடங்கிய அரசியல் குழப்பங்கள் இப்போது ஸ்ரீலங்கா சுதந்திஜரக் கட்சிக்குள் மையம் கொண்டிருக்கிறது.
இந்தப் பத்தி எழுதப்படும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்குமா இல்லையா என்ற சந்தேகம் வலுப்பெற்றிருந்தது.
காரணம் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 41 பாராளுமன்ற உறுப்பினர்களில் 16 பேர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளித்திருந்தனர்.
இவர்களில் 6 அமைச்சர்களும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் அடங்கியுள்ளனர். இவர்களை அரசாங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று முதலில் ஐதேக பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கையளித்தனர்.
அதனை விலக்கி விட்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த 16 எம்.பிக்களையும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஐதேகவினரும் ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முன்னரும் சரி, வாக்களித்த பின்னரும் சரி தாம் அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அமைச்சர்கள் 6 பேரும் இருந்து வருகின்றனர்.
ஜனாதிபதி கூறினால் மாத்திரம் வெளியேறுவோம் என்பது அவர்கள் வாதம். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ தனியே கூட்டு அரசாங்கத்தைப் பற்றி மதாத்திரம் கவலைப்படுபவராக இல்லை. அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.
ரணில் வ5ிக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவராக இருப்பதை விட ஜனாதிபதியாக இருக்கவே முடிவு செய்தார்.
அதனால் அவர் சுதந்திரக் கட்சியினருக்கு இறுக்கமான உத்தரவைப் போடவில்லை. ஆனால் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை இழுத்துப் பிடித்துக் கொள்வதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவராக நடந்து கொள்கிறார்.
ஏனென்றால் ஒரு பகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தை விட்டு வெளியேறி தனியான குழுவாக இயங்க ஆரம்பித்தால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து விடும்.
ஏற்கனவே மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தளத்தைப் பெயர்த்துக் கொண்டு போய்விட்டார்.
இந்தநிலையில் 16 எம்.பிக்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி தனி அணியாகச் செயற்பட முனைந்தால் அது கட்சியைப் பலவீனப்படுத்தி விடும்.
மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில் இப்போது எஞ்சியிருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையாவது காப்பாற்ற வேண்டும் என்பதே. அவரது குறியாக இருக்கிறது.
அதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தவர்களை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்ற – வெளியேற விடாமல் தடுத்து வருகிறார்.
ஆனால் அவரது இந்த முயற்சி எந்தளவு காலத்துக்குச் சாத்தியம் என்ற கேள்வியுள்ளது. கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் விலகிக் கொண்டாலோ அல்லது ஒட்டுமொத்தமாக விலகிக் கொண்டாலோ அது மகிந்த அணிக்குத் தான் சாதகமாக அமையும்.
ரணிலுக்கு எதிராக வாக்களித்தவர்களை வெளியேற்றுவதில் ஐதேக உறுதியைக் காண்பித்தாலும் இந்த முயற்சி ஐதேகவுக்கே பாதகமாக அமையக் கூடும்.
ஏனென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் மேலும் பலவீனப்படுத்தப்படும் போது இங்கிருப்பவர்கள் மகிந்த அணியை நோக்கியே செல்வார்கள். அது அவர்களைப் பலப்படுத்தும்.
இதனை ஐக்கிய தேசியக் கட்சியினர் உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை. அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மகிந்த ஆதரவு அணியினரை உடனடியாக தம்முடன் இணைத்துக் கொள்வதற்கும் மகிந்த விரும்பமாட்டார்.
ஏனென்றால் அவர்கள் மகிந்த அணியுடன் இணைந்து கொண்டால் அரசியலில் பரபரப்பு தொய்ந்து விடும் தொடர்ந்தும் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கூட்டு அரசாங்கத்துக்குள் இருந்தால் தான் மகிந்தவுக்குப் பாதுகாப்பு கூடுதல் பலம்.
ஏனென்றால் அவர்கள் அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். முடிவுகளை எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டிருப்பார்கள். எதற்கெடுத்தாலும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்.
கூட்டு அரசாங்கத்தை செயற்படாமல் நிறுத்தி வைப்பதற்கு இவர்களின் உதவி மகிந்தவுக்குத் தேவை. அதனால் தான் தனது பக்கம் வரத் தயாராக இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரைக் கூட இழுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்ள மற்றொரு பிரிவினர் ஐதேகவை தனித்து ஆட்சியமைக்க விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர்.
ஐதேக தனித்து ஆட்சியமைத்தால் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியமைத்தால் தமிழர் தரப்பின் பல கோரிக்கைகளை நிறைவேற்ற முற்படும்.
அது ஜனாதிபதிக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதால் ஐதேக தனித்து ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்கான வேலைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் மேற்கொண்டிருக்கிறார்கள்.
கூட்டு அரசாங்கத்தில் நீடிப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐதேகவுக்கும் இடையில் நீடித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகளால் கூட்டு அரசாங்கத்துக்கான மக்கள் ஆணை பலருக்கும் மறந்தே போய் விட்டது.
2015ம் ஆண்டு இந்தக் கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட போது தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்ற முக்கியமான கொள்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் இப்போது இந்தக் கூட்டு அரசாங்கம் தேசியப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணவில்லை. தமது உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கே தீர்வைக் காண முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்திருந்தார்.
அப்போது அவர் 2015ல் நடந்த தேர்தல்களில் அளிக்கப்பட்ட மக்கள் ஆணையை கூட்டு அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அது மாத்திரமன்றி கூட்டு அரசாங்கம் கவிழ்க்கப்படக் கூடாது. 2015ல் வழங்கப்பட்ட மக்கள் ஆணை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனால் தான் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
ஆனால் கூட்டு அரசாங்கமோ அதைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு மக்கள் ஆணை நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதில் தான் அவர்கள் அக்கறை கொண்டிருக்கிறார்கள்.
இந்தநிலையில் கூட்டு அரசாங்கம் எஞ்சிய பதவிக் காலத்துக்கும் ஆட்சியில் இருந்தாலும் கூட எதையும் உருப்படியாகச் செய்யப் போவதில்லை என்று தான் தோன்றுகிறது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என அமைக்கப்பட்ட கூட்டு அரசாங்கம் பல எலிகள் சேர்ந்தால் வளை எடுக்காது என்ற நிலைக்கு வந்திருக்கிறது.
கூட்டு அரசாங்கத்தின் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற மக்களின் நம்பிக்கை இப்போது கரைந்து போய்க் கொண்டிருக்கிறது.
இதுபற்றி இரண்டு பிரதான கட்சிகளும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.
கூட்டமைப்புத் தான் பாவம் வெல்ல முடியாது நொண்டிக் குதிரையில் பந்தயம் கட்டி விட்டு பரிதாபமாக நிற்கிறது.